You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டிஷ் அரசின் எச்சங்களை அழித்த முதல் குடியரசு தின கொண்டாட்டம்
- எழுதியவர், ஆர். வி. ஸ்மித்
- பதவி, பத்தி எழுத்தாளர்
இன்று குடியரசு தினம் கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இத்தருணத்தில், டெல்லி பழைய கோட்டையில் கொண்டாடப்பட்ட முதல் குடியரசு தினத்தை நினைவுகூர விரும்புகிறேன்.
அப்போது, இறையாண்மை உள்ள இந்திய நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் இருந்தார். இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டப் பின், குடியரசு தின அணிவகுப்பு நடந்தது, பெரிய துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் விண்ணில் பாய்ந்தன, அந்த சத்தம் அந்த கோட்டை எங்கும் எதிரொலித்தது.
அங்கு ஜவஹர்லால் நேரு இருந்தார், மெளண்ட் பேட்டன் வகித்த ஆளுநர் பதவியில் அப்போது சி.ராஜகோபலசாரி இருந்தார்.
பிரிட்டிஷ் அரசின் அனைத்து சுவடுகளும் முடிவுக்கு வருவதை அந்த குடியரசு தின நிகழ்வுகள் பறைசாற்றின. இந்திய தேசம், இறையாண்மை உள்ள முழுவதும் சுதந்திரம் பெற்ற நாடாக, உருவாகி உள்ளதை அந்த நிகழ்வுகள் கூறின.
ஆறாம் ஜார்ஜ் அரசர் வாழ்த்து செய்திகளை அனுப்பி இருந்தார். அந்த வாழ்த்து செய்தியில், `இந்தியா காமன்வெல்த் கூட்டமைப்பில் தொடரும்` என்றும் கூறி இருந்தார்.
'சுபாஷ் சந்திரபோஸ் வருவார்'
அந்த சமயத்தில், மீண்டும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வருவார் என்ற வதந்தி உலவியது. இந்தியாவின் கடைசி முகலாய பேரரசரான பகதூர் ஷா ஜாஃபரின் மரபு வழி வந்த பேகம் தைமூர் ஜகான் அந்த சமயத்தில் இவ்வாறாக கூறினார், 'பிரிட்டிஷ் நுகத்தடி அகற்றப்பட்டதால், பகதூர் ஷா தன் கல்லறையில் புரண்டு படுத்திருப்பார்' . இந்தியா இறையாண்மையுள்ள குடியரசாக அமைவதற்கு, இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டுவிட்டார்.
முதல் குடியரசு தின அணிவகுப்புகள் அவ்வளவு ஆடம்பரமாகவெல்லாம் நடக்கவில்லை. ஆனால், அது கொண்டாடப்பட்ட விதம் ஈர்க்ககூடியதாகவே இருந்தது.
இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படையின் பரிவாரங்கள் அனைத்தும் அந்த அணிவகுப்பில் இடம்பெற்று இருந்தன.
இப்போது இந்த அணிவகுப்பு நடைபெறுவது போல, ராஜபாட்டையிலிருந்து புது டெல்லி வழியாகவெல்லாம் அந்த அணிவகுப்பு செல்லவில்லை. அந்த மைதானத்திற்குள் மட்டுமே அணிவகுப்பு நடைபெற்றது.
இப்போது இருப்பதை போல நவீன ஜெட் விமானங்கள் எல்லாம், அந்த அணிவகுப்பில் இடம்பெறவில்லை. சிறிய டகோட்டா விமானங்கள், ஸ்பிட் ஃபயர் விமானங்கள் மட்டுமே அப்போது அணிவகுப்பில் இடம்பெற்றன.
ஃபீல்ட் மார்ஷல் கரியப்பாதான், அப்போது இந்திய நாட்டின் படைகளுக்கு முதல் தலைவரக இருந்தார். பிரிட்டிஷ் - இந்தியப் படைகளில் பணியாற்றிய அவர், அப்போதே பல கெளரவமான பதக்கங்களை வென்றிருந்தார்.
கூர்க் பகுதியை சேர்ந்த அவர், கொச்சையான அரைகுறை இந்தியில், "நாங்களும் விடுதலை அடைந்துவிட்டோம். நீங்களும் விடுதலை அடைந்துவிட்டீர்கள். நம் குழந்தைகளும் விடுதலை அடைந்துவிட்டன." என்று பேசினார். அந்த உரை பாராட்டுகளைக் குவித்தது.
மகிழ்ச்சி. எங்கு காணினும் மகிழ்ச்சி!
அப்போது இளைஞராக இருந்த பேராசிரியர் காலிக் அஞ்சிம், அந்தக் குடியரசு தின நிகழ்வு தருணத்தில் நல்லியல்புகளை பற்றி பேசினார். 1901ல் விக்டோரியா அரசி இறந்த போது பள்ளிச் சிறுவனாக இருந்த ஹாஜி ஜகூருதீன், குடியரசு தின நிகழ்வுகளின் போது அனைவருக்கும் இனிப்புகள் விநியோகித்தார். ஜும்மா மசூதி அருகே அப்போது ஜகூருதீனுக்கு ஓர் உணவகம் இருந்தது. அவர் விநியோகித்த இனிப்புகள் மிக சுவையானதாக இருந்தன. அவை, ஹாஜி கல்லன் என்பவருடைய கடையிலிருந்து வாங்கப்பட்டவை.
அந்த முதல் குடியரசு தின நிகழ்வின்போது, சாந்தினி சவுக் பகுதி, லால் மந்திரிலிருந்து ஃபதேபூர் மஸ்ஜித் வரை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியில் திரண்டிருந்த மக்களின் கரங்களில் சாமந்தி மாலைகளும், சிறிய மூவர்ணக் கொடிகளும் இருந்தன.
சிஸ் கான்ஞ் குருத்வாராவில் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. அங்குமட்டுமல்ல, பங்ளா சாஹிப் குருத்வாராவிலும் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. இந்தியத் தலைநகரின் மிக நவீன சந்தையான கன்னாட் பிளேஸ் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது .
அந்தப் பகுதியில் தாழ்வாரத்தில் நடனமாடியவர்களில் ஒருவர் ராம்லால். அவர் பணியாக்ளுக்கும், பிரிட்டிஷ் படை வீரர்களுக்கும் கால் நகத்தை சுத்தம் செய்பவர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், பூட்ஸ் அணிவதால் வலிக்கும் தங்கள் பாதங்களை பிடித்து விடச் சொல்லி ராணுவ வீரர்கள் வருவார்கள்.
அந்த தினங்களை இன்றும் அதே உற்சாகத்துடன் நினைவுகூர்கிறார் ராம் லால். ஒரு முறை ஒரு ராணுவ வீரர் 100 ரூபாய் தாளை, கால்களை பிடித்துவிட்டதற்காக வழங்கி இருக்கிறார். ராம் லால் மீத பணத்தை கொடுக்க அந்த ராணுவ வீரரை துரத்தியபோது, அந்த ராணுவ வீரர், ராம் லால் அதிகப் பணம் கேட்பதாக நினைத்து துப்பாக்கியை நீட்டி இருக்கிறார்.
நூறு ரூபாய் இன்றைய ஆயிரங்களுக்கு சமம் என்கிறார் ராம்லால்.
தங்களது மிக நீண்ட மீசைகளுக்காக அறியப்படும் பங்களா காவலாளிகள் சாந்தினி சவுக்கில் மக்களுடன் மக்களாக நடனமாடினர்.
ஃபதேபூரில் உள்ள இஸ்லாமியர்களுக்கு சொந்தமான உணவகங்கள் சிறந்த உணவினை குடியரசு தின கொண்டாட்டமாக மக்களுக்கு வழங்கின. மடிய மகால் பகுதியில் உள்ள கரீம், ஜவஹர் மற்றும் சில உணவகங்கள் பிச்சைகாரர்களுக்கு இலவசமாக உணவு வழங்கின. கபாப் மற்றும் பால் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலை அறிவித்து இருந்தனர்.
நாகரிகத்தின் உச்சம்
இரவில் அனைத்து அரசாங்க கட்டடங்கள், சில தனியார் கட்டடங்களில் விளக்கேற்றப்பட்டன. ராஷ்டிரபதி பவனாக மாறிய வைஸ்ராயின் இல்லம், மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணின் தோற்றத்தில் இருந்தது.
நாடாளுமன்றம், இந்தியா கேட் மற்றும் ரெட் ஃபோர்ட் கட்டடங்கள் விளக்கால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
ராஷ்டிரபதிபவனில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. வடக்கு பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணம் ஆகிய பகுதியிலிருந்து வந்த அகதிகள் மற்றும் பாகிஸ்தான் செல்வதற்காக பழைய கோட்டையில் தங்கி இருந்த அகதிகளின் துயர் துடைக்க அதிகம் பங்களிப்பை அளித்த ஜவஹர்லால் நேரு, அவருடைய மகள் இந்திரா காந்தி, ராஜேந்திர பிரசாத், சர்தார் பட்டேல், மவுலானா ஆஸாத், சர்தார் பல்தேவ் சிங் மற்றும் கபூர்தலாவின் இளவரசி ராஜகுமாரி அம்ரித் கவுர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
முதல் குடியரசு தினம் கொண்டாட்டப்பட்ட அளவிற்கு வேறு எந்த நிகழ்வும் கொண்டாடப்படவில்லை என்கிறார் காஷ்மீரி கேட் பகுதியை சேர்ந்த பண்டிட் ராம்சந்தர்.
வட கிழக்கு மாகாணங்களில் இருந்த தலை வெட்டிகளுக்கு எதிரான பிரிட்டிஷ் நடவடிக்கையை நடத்திக் காட்டிய 1873 ஆம் ஆண்டு பிறந்த சர் ஹென்றி ஜிட்னி அவர்களின் கருத்து பொய்யாகவில்லை. அவர் இவ்வாறாக கூறி இருந்தார், "கடந்த காலத்தில் இந்திய நாகரிகம் மனித குலத்தின் உன்னதங்களைத் தொட்டுள்ளது. அந்த சாதனை மீண்டும் நிகழ்த்தப்படவுள்ளது."
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்