நீதிபதி லோயா மரணம் குறித்த சர்ச்சை: உச்சநீதிமன்றமே விசாரிக்க முடிவு
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்.

பட மூலாதாரம், CARAVAN MAGAZINE
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, இறுதியாக விசாரணை நடத்திய வழக்குகளில் ஒன்று குஜராத்தில் நடந்த சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு என்பதும், இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவும் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார் என்பதும் லோயாவின் மரணம் பற்றி சர்ச்சையை கிளப்பியது.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாக்பூர் சென்றிருந்த லோயா 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி மரணமடைந்தார்.
நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கும்.

பட மூலாதாரம், DDnews
இந்த அமர்வில் நீதிபதி ஏ.எம் கான்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இடம் பெற்றுள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி இரண்டாம் தேதியன்று நடைபெறும்.
மனு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், "அனைத்து ஆவணங்களையும் சட்ட அமர்வு கவனத்துடன் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது" என்று கூறியது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சாவ்லே, மனு பற்றிய தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்த வழக்கறிஞர்களின் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவின் பெயரை குறிப்பிட்டார்.
தவேயின் இந்த குற்றச்சாட்டிற்கு ஹரீஷ் சால்வே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பிறகு, தவேயிடம் கோபத்தை வெளிப்படுத்திய நீதிமன்ற அமர்வு, "இதுவரை நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது என்றே கருதப்படுகிறது, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க வேண்டும்" என்று கூறியது.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று, ஹைதராபாதிலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு பயணித்த சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கௌசர் பி ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். பிறகு மேற்கொள்ளப்பட்ட என்கவுண்ட்டரில் அவர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், 2006ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் நடத்தப்பட்ட மற்றொரு போலி என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த படுகொலைகளின் பின்னணியில் அமித்ஷா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், UDAY GAWRE
இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இந்த வழக்கின் சில முக்கிய திருப்பங்கள்.
•குஜராத் மாநிலத்திற்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தப்படவேண்டும், விசாரணையின் போது நீதிபதியை மாற்ற முடியாது.
•சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 மே மாதத்தில் விசாரணைக்கு ஆஜாராகுமாறு அமித் ஷாவுக்கு சம்மன் அனுப்பினார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க கோரிய அமித் ஷாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
•அதன் பின்னர் சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 ஜூன் 26 ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாற்றப்பட்டார்.
•இதன்பிறகு வழக்கு நீதிபதி லோயாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி லோயாவின் நீதிமன்றத்தில் அமித் ஷா ஆஜராகவேயில்லை.
•2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நீதிபதி லோயா நாக்பூரில் மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பான பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.
•நீதிபதி லோயாவின் மரணத்திற்கு பிறகு சொராபுதீன் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.வி. கோசவி, புலனாய்வு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி, 2014 டிசம்பரில் அமித் ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












