You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசுப் பணிகள் நிறுத்தம்: சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் விசா தடையின்றி கிடைக்குமா?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அமெரிக்க அரசின் உள்நாட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரக செயல்பாடுகளும் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதிவரை அமெரிக்க அரசின் பல்வேறு துறைகள் செயல்படுவதற்கு தேவையான நிதியை அளிக்கும் ஒரு மசோதா, அதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுக்குள் தேவையான 60 வாக்குகளை பெறவில்லை.
எனவே, அமெரிக்க அரசின் வரவு செலவுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க செனட் சபை மறுத்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அரசுப் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகள் தவிர பிற துறைகள் எதுவும் இயங்காது என்றும், சுமார் 50 சதவீத அரசு துறைகள் இயங்காது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கல்வி, தொழில், பணிவாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக செல்பவர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் பணிகளில் பகுதியளவு காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முகநூல் பக்கத்தில், "நிதி ஒதுக்கீடு சார்ந்த நாடாளுமன்ற ஒப்புதலின்றி அமெரிக்க அரசின் பணி தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது. எனினும், சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் வழக்கம்போல் இயங்கும். விசா நேர்காணல் அல்லது அமெரிக்க குடிமக்கள் சேவை ஆகியவற்றுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு வரவும். அடுத்த அறிவிப்பு வரும் வரை அமெரிக்க மையம் (அமெரிக்கன் சென்டர்) இயங்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்