லோயா மரணம் குறித்த சர்ச்சையும், அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகளும்

பட மூலாதாரம், CARAVAN MAGAZINE
மறைந்த நீதிபதி பி.எச். லோயாவின் மகன் அனூஜ் லோயா ஞாயிற்றுக்கிழமையன்று செய்தி ஊடகங்களிடம் பேசியபோது, தனது தந்தையின் மரணத்தைப் பற்றி 'சந்தேகம் ஏதும் இல்லை' என்றும், தனது தந்தையின் மரணத்திற்கு 'யாரும் பொறுப்பில்லை' என்று குடும்பத்தினர் அனைவரும் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ''எந்த விசாரணையும் எங்களுக்குத் தேவையில்லை'' எனவும் அனூஜ் தெரிவித்தார். நீதிபதி லோயாவின் மரணத்திற்கு அரசியல் ரீதியான எதிர்விளைவுகள் தொடர்ந்து எழுப்பப்படுவது ஏன்?
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, தனது மரணத்திற்கு முன் விசாரித்துக் கொண்டிருந்தது குஜராத்தில் நடைபெற்ற சொரபுதீன் என்கவுன்டர் வழக்கு என்பதும், இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்ததுமே காரணம்.
சி.பி.ஐ சிறப்பு நீதிபதி, பிரஜ்கோபால் லோயா மரணமடைந்த சூழ்நிலை சந்தேகத்திற்குரியதாக இருந்ததாக ஆங்கில பத்திரிக்கை 'கேரவன்' 2017இல் முதல் முறையாக செய்தி வெளியிட்டிருந்தது. மறைந்த நீதிபதியின் உறவினர்களுடன் பேசியதன் அடிப்படையில் அந்த செய்தி வெளியிடப்பட்டது.
2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீதிபதி லோயா மரணமடைந்தார். மாரடைப்பினால் அவர் இறந்ததாக கூறப்பட்டது.
இரண்டு கடிதங்கள், இரண்டு உரிமைகோரல்கள்

பட மூலாதாரம், Twitter/ Hartosh Singh Bal
'தி கேரவன்' என்ற பத்திரிகையின் அரசியல் விவகார ஆசிரியரான ஹர்தோஷ் சிங் பால், ஞாயிறன்று அனூஜ் லோயாவின் இரண்டு கடிதங்களை ட்விட்டரில் வெளியிட்டார். முதல் கடிதத்தில் தந்தை மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கோரியிருந்தார் அனூஜ்.
இந்த கடிதம் தொடர்பாக 'கேரவன்' செய்தி வெளியிட்ட சில நாட்களுக்குப் பின்னர், மற்றொரு கடிதத்தை எழுதிய அனூஜ் லோயா, தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த இரண்டு கடிதங்களும் அனூஜ் லோயாவின் நெருங்கிய நண்பரால் அனுப்பப்பட்டது என்று 'தி கேரவன்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்ல, அனூஜ் லோயா ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்தப் பிறகு ஹர்தோஷ் சிங் பால் மற்றொரு டிவிட்டர் செய்தியையும் வெளியிட்டார்.
அதில், "அனூஜ் லோயா தனது முதல் கடிதத்தை மறுக்கவில்லை, தனது குடும்பத்தினரின் வீடியோ செய்தி பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை. விசாரணை நடைபெற்றால் யாருக்கும் எந்த கெடுதலும் ஏற்படாது என்பதோடு, சந்தேகங்கள் அனைத்தும் முடிந்துவிடும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுப்பும் கேள்விகள்

பட மூலாதாரம், INDIAN EXPRESS
ஆனால், 'த கேரவன்' பத்திரிகை செய்தி வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய கட்டுரையில் 'த கேரவன்' பத்திரிகையின் செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
'நெஞ்சுவலி ஏற்பட்ட நீதிபதி லோயா ஆட்டோ ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்' என்றும், 'நெஞ்சுவலி ஏற்பட்ட லோயாவுக்கு ஈ.சி.ஜி ஏன் எடுக்கப்படவில்லை' என்றும் அவரது சகோதரி கேள்வி எழுப்பியதாக 'த கேரவன்' பத்திரிகை கூறுகிறது.
ஆனால் நாக்பூரில் லோயாவுக்கு சிகிச்சையளித்த தாண்டே மருத்துவமனையின் மேலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஈ.சி.ஜி அறிக்கை இதோ என்று கூறி அதை நவம்பர் 27 அன்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்டது.
நீதிபதி லோயாவிற்கு ஈ.சி.ஜி பரிசோதனை செய்யப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்த இந்தியன் எக்ஸ்பிரஸ், உடல்நலம் குன்றிய லோயா மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார், ஆட்டோ ரிக்ஷாவில் அல்ல என்றும் ஒரு நீதிபதி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாகவும் அந்த கட்டுரை தெரிவித்தது.
அதன்பின் சர்ச்சைகள் வேறு விதத்தில் தொடர்ந்தன. ஈ.சி.ஜியில் குறிப்பிடப்பட்ட தேதி குறித்த ஐயப்பாடு கிளம்பியது. இந்தியன் எக்ஸ்பிரஸின் வெளியான ஈ.சி.ஜி அறிக்கையில் நவம்பர் 30ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நீதிபதி லோயா இறப்பதற்கு முதல் நாள் எடுக்கப்பட்டது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்று எடுக்கப்பட்டதல்ல. சர்ச்சைகளுக்கு பின்னர் விளக்கம் அளித்த மருத்துவமனை, 'அமெரிக்க நேரத்தை அடிப்படையாக கொண்டிருந்த ஈ.சி.ஜி இயந்திரத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு அது' என்று கூறியது.
அதாவது லோயாவிற்கு ஈ.சி.ஜி எடுக்கப்படவில்லை என்று அவரது சகோதரியின் கருத்து இந்தியன் எக்ஸ்பிரசால் மறுக்கப்பட, அந்த கட்டுரையில் வெளியிடப்பட்ட பரிசோதனை அறிக்கையில் இருந்த ஒரு தவறு பிறரால் சுட்டிக்காட்டப்பட, அதற்கு மருத்துவமனை, தனது இயந்திரம் பற்றிய விளக்கம் அளிக்க நேர்ந்தது. இப்படி லோயாவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
லாதூர் பார் அசோசியேஷன் கோரிக்கை

பட மூலாதாரம், UDAY GAWRE
நீதிபதி லோயா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்த லாதூர் நகர பார் அசோசியேஷன், அதற்கான நீதிபதி கமிஷனை உருவாக்க வேண்டும் என்றும் கோரியது.
நீதிபதி லோயாவுடன் கல்வி பயின்றவரும், அவருடைய நண்பரும் லாதூர் பார் அசோசியேஷன் உறுப்பினருமான வழக்கறிஞர் உதய் காவாரேயுடன் பிபிசி செய்தியாளர் உரையாடினார். அப்போது, "சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்தபோது, லோயாவுக்கு அழுத்தம் தரப்பட்டது, அவர் பதற்றத்தில் இருந்தார். எனவே அவரது மரணத்தில் சந்தேகம் எழுகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது கருத்துப்படி, "லோயாவின் இறுதி சடங்கில் கலந்துக்கொண்டேன். மரணம் இயற்கையானது இல்லை என்ற கேள்வி அப்போதும் எழுப்பப்பட்டது. ஆனால் விவகாரத்தில் எங்கோ குழப்பம் இருக்கிறது. அவருடைய குடும்பத்தினர் அழுத்தத்தில் இருந்தனர், அப்போது மரணம் தொடர்பான சந்தேகம் எதையும் வெளிப்படையாக பேசவில்லை. தற்போது அவரது மகனே பத்திரிகை செய்தியில் கேள்வி எழுப்பிய பிறகு விசாரணை அவசியமாகிறது. மூன்று ஆண்டுகள் கழிந்தால் என்ன? இப்போது விசாரிக்கக்கூடாதா?"
லோயாவின் இறப்பு வழக்கு மற்றும் உச்ச நீதிமன்றம்
நீதிபதி லோயா மரணம் தொடர்பான சூழ்நிலையை விசாரிக்கவேண்டும் என்று மும்பை வக்கீல் கூட்டமைப்பு ஜனவரி 4ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தஹ்ஸின் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளின் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, நீதிபதி லோயா மரணம் தொடர்பான முக்கிய வழக்கு பற்றியும் பேசுகிறீர்களா கேட்கப்பட்டதற்கு "ஆம்" என்று பதிலளித்தார் நீதிபதி ரஞ்சன் கோகோய்.
நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மகாராஷ்ட்ராவை சேர்ந்த பத்திரிகையாளர் பந்தூ ராஜ் லோனே மற்றொரு மனுவை தாக்கல் செய்தார்.
இப்போது உச்ச நீதிமன்றத்தில் லோயா மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களும் ஒன்றாக்கப்பட்டு, அதை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா விசாரிப்பார்.
முக்கியமான வழக்குகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் வழக்கு விசாரிக்கப்படும் நிலையில், மூத்த நீதிபதிகளிடம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை ஒப்படைக்காமல், ஜூனியர் நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு ஏன் ஒதுக்கப்பட்டது என்று பிரசாந்த் பூஷண் மற்றும் பலர் சந்தேக கேள்வி எழுப்புகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழக்கு ஒதுக்குவது தொடர்பான கேள்விகளையும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள், தங்களுடைய செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லோயாவின் மரணம் சர்ச்சைகளுக்கு உள்ளாவது ஏன்?

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பதால்தான் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டதாக குஜராத் மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு சிறப்பு காவல் பிரிவு தெரிவித்திருந்தது. மேலும் அப்போதைய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோதியை கொலை செய்ய சொராபுதீன் ஷேக் சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறப்பட்டது.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று, ஹைதராபாதிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணித்த சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கௌசர் பி ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
பிரகு மேற்கொள்ளப்பட்ட என்கவுன்ட்டரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் போலியானது என்றும், இதில் அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், 2006ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு போலி என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைகளின் பின்னணியில் அமித்ஷா இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
பிறகு, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் விசாரணை தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, அமித் ஷா மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. குஜராத் மாநிலத்திற்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தப்படவேண்டும், விசாரணையின் போது நீதிபதியை மாற்ற முடியாது. அதன் பிறகு வழக்கில் நடைபெற்ற முக்கிய திருப்பங்கள்:
- சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 மே மாதத்தில் விசாரணைக்கு ஆஜாராகுமாறு அமித் ஷாவுக்கு சம்மன் அனுப்பினார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க கோரி அமித் ஷாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 ஜூன் 26 ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாற்றப்பட்டார்.
- இதன்பிறகு வழக்கு நீதிபதி லோயாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி லோயாவின் நீதிமன்றத்தில் அமித் ஷா ஆஜராகவேயில்லை. 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் நீதிபதி லோயா இறந்தார். அவரது மரணம் தொடர்பான பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.
- நீதிபதி லோயாவின் மரணத்திற்கு பிறகு சொராபுதீன் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.வி. கோசவி, புலனாய்வு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி, 2014 டிசம்பரில் அமித் ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












