You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
H1B விசா என்றால் என்ன? 10 முக்கிய தகவல்கள்
- எழுதியவர், வரிகூட்டி ராமகிருஷ்ண ரெட்டி
- பதவி, பிபிசி
அமெரிக்கா இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. மில்லியன் கணக்கான இந்திய குடும்பங்கள் அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே வாழ்கின்றனர்.
ஆனால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, H1B விசா தொடர்பாக அவருடைய நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கில் ஐ.டி ஊழியர்களின் தலைவிதி போன்றவை இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளன.
1. விசா என்றால் என்ன?
ஒரு வெளிநாட்டிற்குள் நுழையவோ அல்லது பயணிக்கவோ கொடுக்கப்படும் அனுமதி விசா என்று கூறப்படுகிறது. வணிகம், சுற்றுலா, பார்வையாளர், விளையாட்டு, கலாச்சாரம் என பல்வேறு வகையான விசாக்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
2. H1B விசா என்றால் என்ன?
ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கிறது H1B விசா. இந்த வகை விசாக்கள் குறிப்பிட்டத் துறையில் திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
3. H1B விசா எப்படி உருவானது?
1990 களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் கணிசமான வேலைவாய்ப்புகளை வழங்கின. அமெரிக்காவில் தொழில்சார் மனித வளங்கள் தேவையான அளவு இல்லாத்தால், அந்தப் பணிகளில் வெளிநாட்டவர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அவ்வாறு அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. குடியேற்றச் சட்டம்-1990கீழ் H1B விசாவுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அனுமதி கொடுத்தார்.
4. விசாவில் இது என்ன வகை?
அமெரிக்கா வழங்கும் விசாக்களில் குடியேற்ற உரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை. அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும். தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின்கீழ் வருகிறது.
5. H1B விசாவின் வகைகள்
அமெரிக்க அரசு ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான H1B விசாக்களையே வழங்குகிறது. 3 பிரிவுகளின்கீழ் H1B விசாக்கள் வழங்கப்படுகின்றன.
சாதாரண வகை: பொது ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டொன்றுக்கு 65,000 விசாக்கள் வழங்கப்படுகிறது, இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்
முதுநிலை படிப்பு: அமெரிக்காவில் முதுநிலை பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு 20,000 விசாக்கள் வழங்கப்படும். இந்த விசாவிற்கு அனைவரும் விண்ணப்பிக்க முடியாது.
ஒதுக்கீடு : தடையில்லா வர்த்தக பிரிவின் கீழ் சிங்கப்பூர் மற்றும் சிலிக்கு 6,800 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
6. தேர்வு நடைமுறை:
H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படும்.
7. யார் விண்ணப்பிக்க முடியும்?
பெருநிறுவனங்களும், பிற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக H1B விசாவிற்கு விண்ணப்பிக்கின்றன. சில நிறுவனங்கள் H1B விசாக்களை ஸ்பான்சர் செய்கின்றன.
8. விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
H1B விசாவிற்கான கட்டணம் 1600 - 7400 அமெரிக்க டாலர்கள் (1 லட்சம் - 5 லட்சம் ரூபாய்) வரை இருக்கும். நிறுவனத்தின் அளவைப் பொறுத்து கட்டண விகிதம் மாறுபடும். 50 க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனம் அல்லது ஒரு நிறுவனத்தின் 50% ஊழியர்கள் H1B விசா வைத்திருப்பவர்கள் என்றால், அவர்கள் 4000 அமெரிக்க டாலர்கள் (ரூபாய் 2.60 லட்சம்) கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
9. எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
H1B விசா, வழங்கப்பட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது.
10. சார்பு விசா (Dependent Visa)
H1B விசா பெற்றவரின் குடும்ப உறுப்பினர்கள் சார்பு விசா பெற்று H1B விசா பெற்றவருடன் தங்கலாம். இதற்காக அவர்கள் H4 விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மனைவி மற்றும் 21 வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த சார்பு விசாவிற்கு தகுதியுடையவர்கள். H4b விசா வைத்திருப்பவர்கள் தங்கள் கல்வியை அமெரிக்காவில் தொடரலாம். இருப்பினும், அவர்கள் அமெரிக்காவில் எந்தவொரு வேலைவாய்ப்பையும் பெற அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டுமெனில் அதற்காக வேலை அனுமதி பெற வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :