You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வன்புணர்வை தடுக்கும் உள்ளாடை: 19 வயது மாணவியின் கண்டுபிடிப்பு
- எழுதியவர், மீனா கோட்வால்
- பதவி, பிபிசி
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை தனது கண்டுபிடிப்பு தடுக்கும் என்று நம்புகிறார் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்.
சீனூ என்ற இளம் பெண் உருவாக்கியிருக்கும் பெண்களுக்கான உள்ளாடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒருவிதமான பூட்டு அமைப்பு பெண்கள் பாலியல்ரீதியாக வன்புணர்வு செய்யப்படுவதை தடுக்கும். தனது கண்டுபிடிப்புக்கு 'ரேப் ப்ரூஃப் பேண்ட்டி' என்று சீனூ பெயரிட்டுள்ளார்.
இந்த உள்ளாடையை வடிவமைப்பதற்கு 'புல்லட் ப்ரூஃப் வகையிலான துணியை சீனூ பயன்படுத்தியிருக்கிறார். இதில் தலா ஒரு ஸ்மார்ட் லாக், ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் பதிவுக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இந்த இளம்பெண் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு விவசாயி.
தனது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் சீனூ, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி தனது கண்டுபிடிப்பை பாராட்டியிருப்பதாக கூறுகிறார்.
இந்த கண்டுபிடிப்பின் சிறப்பம்சங்கள் என்ன?
இளம் கண்டுபிடிப்பாளர் சீனூவிடம் பிபிசி பேசியபோது, இந்த உள்ளாடையை சுலபமாக வெட்டவோ அல்லது எரிக்கவோ முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும், இதில் இருக்கும் ஸ்மார்ட் லாக், கடவுச்சொல் இல்லாமல் திறக்காது என்பதையும் குறிப்பிடுகிறார்.
இதில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால் 100 அல்லது எமர்ஜென்சி எண் ஒன்றுக்கு உடனே தொலைபேசி அழைப்பு செல்லும், அதில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆர்.எஸ்ஸின் உதவியால் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை போலீஸ் கண்டுபிடித்துவிடும். அதோடு, பதிவுக்கருவி அக்கம்பக்கத்தில் எழும் ஓசைகளை பதிவு செய்யத் துவங்கிவிடும்.
போலீசைத் தவிர குடும்பத்தினர் யாருடைய தொலைபேசி எண்ணை இதில் இணைக்கமுடியுமா?
இதற்கு பதிலளிக்கும் சீனூ, "இது நாம் எப்படி செட்டிங் செய்கிறோம் என்பதை பொருத்தது. அவசரகாலத்தில் யாருக்கு முதல் அழைப்பு செல்லவேண்டும் என்பதற்கு ஏற்றவாறு இதில் தொலைபேசி எண் பதியப்படும்" என்று சொல்கிறார்.
"பொதுவாக 100 மற்றும் 1090 ஆகிய எண்கள் எப்போதும் அவசரகால உதவிக்கு வரத் தயாராக இருப்பவை என்பதோடு, காவல்நிலையத்தின் உதவி விரைவில் கிடைக்கும் என்பதால் இந்த தொலைபேசி எண்ணை பதிந்துக்கொள்வது நல்லது" என்று சொல்கிறார் சீனூ.
இந்த உள்ளாடையை தயாரிப்பதற்கு நான்காயிரம் ரூபாய் செலவானதாக சொல்லும் சீனூ, தனது குடும்பத்தினரின் ஆதரவு தனக்கு ஊக்கமளிப்பதாக சொல்கிறார்.
'உதவி கிடைத்தால் உத்வேகம் கிடைக்கும்'
தனது சுய ஆர்வத்தால், ஆராய்ச்சி செய்து இந்த புத்தாக்கத்தை உருவாக்கியிருப்பதாக கூறும் சீனூ, இதைத் தவிர வேறு சில பொருட்கள் தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
மலிவு விலை பொருட்களை பயன்படுத்தி பொருட்களை உருவாக்குவதாக கூறும் சீனூ, இன்னும் சற்று விலை அதிகமான துணியையும் பொருட்களையும் பயன்படுத்தினால், பொருளின் தரம் இன்னமும் மேம்படும் என்று சொல்கிறார். ஆனால் அதற்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சீனூவுக்கு நிறுவனங்களோ அல்லது அரசோ உதவி செய்தால் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என்று கருதுகிறார்.
"இப்போது ஒரு மாதிரி மட்டுமே தயாரித்து எனது லட்சியப்பாதையை தொடங்கியிருக்கிறேன்" என்று சொல்கிறார் சீனூ.
"தொலைகாட்சியில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கும். தனியாக வெளியே செல்லவே பயப்படுவேன்.
எம்.பியின் உதவி
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஃபரூகாபாத் எம்.பி முகேஷ் ராஜ்பூத் சீனூவின் கண்டுபிடிப்பு பற்றி மத்திய அமைச்சரவைக்கு அதிகாரபூர்வ கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
சீனூவின் முயற்சிக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி பாராட்டு தெரிவித்ததாக அவர் கூறுகிறார். இந்த உள்ளாடைகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பம் அலாகாபாதில் அமைந்துள்ள தேசிய கண்டுபிடிப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தனது கண்டுபிடிப்பை சந்தைப்படுத்துவதற்கு முன்பு இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று சொல்லும் சீனூ, பெண்கள் இதை எப்போதுமே அணியவேண்டியதில்லை என்கிறார்.
எங்காவது தனியாக செல்லும்போது மட்டுமே அணிந்துக் கொண்டால் போதும். அதாவது, புல்லட் ப்ரூஃப் கவசத்தை எதுபோன்ற சமயங்களில் பயன்படுத்துவோமோ, அதேபோல் தேவைப்படும்போது மட்டுமே இந்த உள்ளாடையை பெண்கள் பயன்படுத்தினால் போதுமானது.
புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் பாலியல் வன்புணர்வு தொடர்பான அண்மைத் தரவுகளின்படி, நாள்தோறும் 79 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர்.
நாட்டிலேயே மத்தியப்பிரதேச மாநிலத்தின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி, 2016ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகள் 28,947 என்றால், அதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 4882 வழக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் 4816 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 4,189 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்