You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்துக் கோவில்களை இடிக்கச் சொன்னாரா திருமாவளவன்?
தன்னுடைய பொதுக்கூட்டப் பேச்சு ஒன்றில், இந்துக் கோவில்களை இடிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாகக் கூறப்படுவதற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் அவர்.
டிசம்பர் 6ஆம் தேதியன்று சென்னை ஜமாலியாவில் நடந்த அம்பேத்கர் நினைவு நாள் கூட்டத்தில் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், ராமர் கோவில் பிரச்சனை குறித்துப் பேசும்போது, "அப்படிப் பார்த்தால் இன்றைக்கு சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் இருக்கும் இடமெல்லாம் பௌத்த விகாரைகளாக இருந்தன. பௌத்த விகாரைகளை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அவற்றையெல்லாம் இடித்துவிட்டு பவுத்த விகாரைகளைக் கட்ட வேண்டும். ஒரு வாதத்திற்காக இதைச் சொல்கிறேன்" என்று பேசினார்.
அவரது இந்தப் பேச்சு தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பானதையடுத்து, இது குறித்து பாரதிய ஜனதாக் கட்சியினரும் இந்து அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினர். சமூக வலைதளங்களிலும் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், தான் இந்துக் கோவில்களை இடிக்க வேண்டுமெனப் பேசியதாகக் கூறப்படுவதற்கு திருமாவளவன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பிபியிடம் பேசிய அவர், "இந்துக் கோவில்களை இடிப்போம் என்ற வாக்கியத்தை நான் எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை. பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோவில் இருந்தது என்று அவர்கள் சொல்வதால், இந்துக் கோவில்கள் இருந்த இடத்தில் முன்பு பௌத்த விகாரைகள் இருந்தன என்று நான் சொன்னேன். அப்படிச் சொல்கிறபோதே, ஒரு வாதத்திற்காகச் சொல்கிறேன் என்றும் குறிப்பிட்டேன். பாபர் மசூதியை இடிப்பதற்கு நீங்கள் சொல்லும் வாதம் இதற்கும் பொருந்தும் என்றுதான் நான் குறிப்பிட்டேன். நான் சொல்லாத கருத்துக்களை இவர்களே தலைப்பிட்டு அவதூறு பரப்புகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
மேலும், "நான் சொன்ன கருத்துகள் நானாகச் சொன்னவையல்ல. பல கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் நீண்ட நெடிய ஆய்வுக்குப் பின்னர், சான்றாவணத்துடன் இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். பௌத்த விகாரைகள் இருந்த இடத்தில்தான் இன்றைக்கு சைவ,வைணவக் கோவில்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன என்ற கருத்திலிருந்து நான் மாறவில்லை. ஆனால், இந்துக் கோவில்களை இடிப்போம் வாருங்கள் என்று சவால் விடுத்ததைப்போல சிலர் கருத்துகளைப் பரப்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது" என்றும் குறிப்பிட்டார் திருமாவளவன்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்