ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் காலியாக உள்ள அவரது சட்டமன்றத் தொகுதியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

காலியாக உள்ள சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் சுமார் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டுமென தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகருக்கு தேர்தல் நடத்தத் திட்டமிட்டிருந்தபோது, அங்குள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்த பிறகு தேர்தலை நடத்த வேண்டுமென அந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட மருது கணேஷும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜ், எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இரு முறை இடம்பெற்றவர்கள் என சுமார் 46 ஆயிரம் பேரைக் கண்டறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், போலி வாக்காளர்களைக் கண்டறிந்த பிறகே தேர்தல் நடத்த வேண்டுமென தி.மு.க. வழக்குத் தொடர்ந்திருப்பதால், தேர்தல் தேதியை அறிவிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

தி.மு.கவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். போலி வாக்காளர்களை நீக்கிவிட்டு தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயலலிதா மறைந்து ஒரு வருடமாகவுள்ள நிலையில், அந்த தொகுதி இன்னமும் ஏன் காலியாக இருக்கிறது எனக் கேள்வியெழுப்பினர். உடனடியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் கூறினர்.

இதற்கு முன்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டுமெனக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த இதே அமர்வு, டிசம்பர் 31க்குள் தேர்தலை நடத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

அதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டுமென்றும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

சென்னையின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா இரு முறை வெற்றிபெற்றுள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு அந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா நடந்ததாகப் புகார் எழுந்ததால், தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்தது.

வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்ட விவகாரத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யக்கோரி மருது கணேஷ் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சடல பொம்மை பிரசாரம் (காணொளி)

காணொளிக் குறிப்பு, ஜெயலலிதாவின் சடல பொம்மையை வைத்து பிரசாரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :