சசிகலா கணவர் நடராஜனின் சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
சொகுசு கார் ஒன்றை வரி ஏய்ப்புச் செய்து இறக்குமதி செய்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம். நடராஜனுக்கும் மேலும் மூவருக்கும் வழங்கப்பட்ட இரண்டாண்டு கால சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், 1994ஆம் வருடத்தில் லெக்ஸஸ் வகை கார் ஒன்றை வெளிநாட்டிலிருந்து நடராஜன் இறக்குமதி செய்தார். அந்தக் கார் 1993ஆம் ஆண்டில் உற்பத்திசெய்யப்பட்டு, விற்கப்பட்ட கார் என்று கூறி இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால், அது புதிய கார் என்றும் 1.6 கோடி ரூபாய் அளவுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் இருக்கவே பழைய காராக காண்பிக்கப்பட்டதாகவும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தில் எம். நடராஜன், அவருடைய உறவினரான வி. பாஸ்கரன், பாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணனின் மகன் யோகேஷ், இந்தியன் வங்கியின் இரு அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவர்களில் ஒரு அதிகாரி அப்ரூவராக மாறினார்.
பாலகிருஷ்ணன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட, மீதமிருந்த நால்வர் மீது சி.பி.ஐ. வழக்கை நடத்தியது. இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதியன்று நான்கு பேருக்கும் இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை வெள்ளிக்கிழமையன்று உறுதி செய்தது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன்னதாக, நவம்பர் 16ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் சசிகலாவின் வேறு சில உறவினர்களான எஸ்.ஆர். பாஸ்கரன், ஸ்ரீதலாதேவி ஆகியோருக்கு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சிறை தண்டனயை உறுதிசெய்திருந்தது.
ரிசர்வ் வங்கியின் பணியாளராக இருந்த ஆர். பாஸ்கரனின் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவரது வங்கி லாக்கரை சோதனை செய்தபோது அதில் 80 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பாஸ்கரனின் பெயரில் சுமார் ஒரு கோடியே பதினான்கு லட்ச ரூபாய் அளவுக்கு சொத்துகளும் அவருடைய மனைவியும் டிடிவி தினகரனின் சகோதரியுமான ஸ்ரீதலா தேவியின் பெயரில் சுமார் 56 லட்ச ரூபாய்க்கு சொத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், 2008ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. பாஸ்கரனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் 20 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. ஸ்ரீதலா தேவிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.
இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிசெய்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













