You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் கூட்டம் நடத்தியதால் சர்ச்சை
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோயம்புத்தூரில் அரசு அதிகாரிகளை அழைத்து திட்டப்பணிகளை ஆய்வு செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பன்வாரிலால் புரோஹித் கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று அந்த மாவட்டத்திற்கு சென்றார். பட்டமளிப்பு விழா முடிவடைந்த பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துத் துறை உயரதிகாரிகளையும் ஆளுநர் சந்தித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களோடு, ஒவ்வொரு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
மாநில ஆளுநர் இம்மாதிரி கூட்டத்தில் பங்கேற்பதை அறிந்த அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஆளுநரைச் சந்திக்க வந்தார்.
கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் வேலுமணி ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இந்தக் கூட்டம் குறித்து பேசிய வேலுமணி, "ஆளுநர் அதிகாரிகளைச் சந்தித்ததில் தவறேதும் இல்லை. மத்திய - மாநில அரசு திட்டங்கள் பத்தி பேசினோம். நம்ம நாடு நல்ல டெவலப் ஆகும்," என்று கூறினார்.
அமைச்சர் வேலுமணியுடன் அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் ஆளுநரைச் சந்தித்தார். பா.ஜ.கவைச் சேர்ந்த வானதி ஸ்ரீநிவாசனும் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி, "கோவைக்கு வரும் ஆளுநர் அங்கிருக்கும் அதிகாரிகளைச் சந்திப்பது தவறில்லை. அதிகாரம் பறிபோவதாக மாநில அரசு நினைத்தால், அமைச்சர்கள் நினைத்தால் அவர்கள் சொல்லட்டும்; பதில் சொல்கிறோம்" என்று கூறினார்.
ஆளுநர் இவ்வாறு கூட்டம் நடத்தியதைக் கேள்விப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிலர், விருந்தினர் மாளிகை முன்பாகக் கூடி முழக்கங்களை எழுப்பினர். அவர்களைக் காவல்துறை கைதுசெய்தது.
இந்த சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், "கோவை மாவட்டத்தில், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து, திட்டங்கள் அமலாக்கம் குறித்து ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியிருப்பது, வரம்பு மீறிய செயலாகும். பாஜகவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கைப்பாவையாகத்தான் மாநில அரசு செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுவதாக இந்தச் செயல் அமைந்திருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்