இது அவ்வளவு முக்கிய பிரச்சனையா? - செக்ஸ் குற்றச்சாட்டு குறித்து குஜராத்தி பெண்கள் கேள்வி

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP/Getty Images
- எழுதியவர், ராக்ஸி கஜ்டேகர் சாரா,
- பதவி, பிபிசி குஜராத்தி
பட்டேதார் தலைவர் ஹர்திக் பட்டேல், அடையாளம் தெரியாத ஒரு பெண்ணோடு, ஒரு அறையில் உள்ளது போன்ற ஒரு காணொளி சமீபத்தில் வெளியானது.
திங்கட்கிழமை, சமூக வலைதளங்களில் மிகவும் பேசப்பட்ட ஒரு விடியோவாக அது இருந்தது.
இன்னொரு பட்டேதார் தலைவரான அஷ்வின் பட்டேல், அந்த காணொளியில், பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது ஹர்திக் பட்டேல்தான் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்.
இந்த குற்றச்சாட்டை மறுக்கும் ஹர்திக் பட்டேல், "தவறான அரசியலுக்கு பெண்களை பயன்படுத்துவது" குறித்து கேள்விகளை எழுப்புகிறார்.
"காணொளியில் இருப்பது நானில்லை. ஆனால், பாஜக அந்த பெண்ணை தவறான அரசியலுக்காக பயன்படுத்துகிறது" என்று காந்திநகரில் செய்தியாளர்களிடம் ஹர்திக் பட்டேல் கூறினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான கன்ஷ்யாம் ஷா, இத்தகைய காணொளி வெளியானது தனக்கு ஆச்சிரியமாக இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"செக்ஸ் காணொளிகளை பயன்படுத்துவது என்பது, மாநில அரசியலில் புதிய விஷமொன்றும் இல்லை. முன்பு இருந்த அரசியல் தலைவர்களாலும் இத்தகைய விஷயங்கள் பயன்படுத்தப்பட்டன" என்றார்.

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP/Getty Images
2005ஆம் ஆண்டு, பாஜகவின் சஞ்சய் ஜோஷி, ஒரு செக்ஸ் காணொளி விவகாரத்தில் சிக்கினார். பிறகு மத்திய பிரதேச காவல்துறை அந்த குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தது.
இந்த காணொளி, ஹர்திக் பட்டேலை பாதிப்பதைவிட, பெண்களின் மரியாதையையே குறைக்கும் என்று ஷா கூறியுள்ளார்.
பெண்களோடு பழகுவதே அரசியலில் எவ்வாறு ஒரு சர்ச்சையாகவும், சுரண்டலாகவும் மாறிவிடுகிறது என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக பெண் தலைவர்களிடம் பிபிசி கேட்டது.
ஒரு அரசியல் தலைவரோடு, ஒரு பெண்ணை பார்த்தாலே இவ்வாறான சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் வருவதாக, ஒருமித்த குரலில் தங்களின் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர்.
எந்த ஓர் அரசியல் கட்சியும், தங்களை பெண் உரிமைகளின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு, மறுபக்கம், குறைந்தகால ஆதாயத்திற்காக இத்தகைய காணொளிகளை பயன்படுத்த முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/Getty Images
குஜராத் வித்யாபீடத்தின் சமூகவியல் துறை தலைவரான ஆனந்திபென் பட்டேல், பெண்கள் அரசியலில் நுழைவதற்கு இருக்கக்கூடிய தடைக்கற்களாக இத்தகைய சம்பவங்கள் உள்ளது என்று நம்புவதாகக் கூறினார்.
"பொதுவாழ்க்கையில் ஈடுபட விரும்பும் பெண்களின் தன்னம்பிக்கையை இவை பாதிக்கும்" என்றார் அவர்.
இந்த கணொளி பெண்களுக்கு அவமானமான ஒன்று என்று, காங்கிரஸ் கமிட்டியின் குஜராத் மாநில பெண்கள் அணி தலைவரான சோனல் பட்டேல் தத்தா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அந்த காணொளியில் இருப்பது ஹர்திக் பட்டேலாகவே இருந்தாலும், அது அவரின் தனிப்பட்ட விஷயம். அவரின் எதிர்கட்சியினர், பெண்களை பயன்படுத்தி, இத்தகைய காணொளிகளை பதிவு செய்வதைவிட, அவர் செய்த ஊழல் மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கிளரவேண்டும் என்றார்.
இந்த காணொளி பாஜகவினரால் பரப்பப்பட்டது என்று ஹர்திக் குற்றம் சுமத்தும் சூழலில், குஜராத் பாஜக துணைத்தலைவர் ஜசுபென் கோரத், இந்த காணொளியை வைத்து ஹர்திக் பட்டேலை தீயவர் என்று காண்பிக்க விருப்பமில்லாதவர் போல தெரிகிறார்.
"எந்த கட்சி, இத்தகைய காணொளியில் பெண்களை பயன்படுத்தினாலும், அது ஏற்பதற்குறியது அல்ல" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
சவுராஷ்ரா பகுதியில் இருந்து வரும், பாஜகவின் முக்கிய பெண் தலைவரான கோரத், இந்த காணொளி வெளியிடப்பட்ட காலகட்டம் குறித்து கேள்விகளை எழுப்புகிறார்.
இந்த காணொளி 2016 ஆம் ஆண்டு, மே மாதம் வெளியானதாக காண்பிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












