You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு கமல் உயர்ந்துவிட்டார்: எச் ராஜா
இந்து வலதுசாரியினர் கூட்டத்தில் தீவிரவாதம் பரவியிருக்கிறது என்று கடந்த சில தினங்களுக்குமுன் நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் கமலை சீற்றத்துடன் விமர்சித்துள்ளார்.
விஸ்வரூபம் பட பிரச்சனையின்போது முஸ்லிம் அமைப்புகள், 20 ஆண்டுகளுக்கு எங்கள் மீதான கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல என்றும், இந்துக்கள் மீது தாக்குதல் தொடுப்பது வெட்கக்கேடானது என்றும் கமல் ஹாசனை சாடியிருந்தார்.
மேலும், கமல் எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார் என்று கிண்டலடித்துள்ள எச் ராஜா, தேசபக்தர்கள் கமலிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் ஆதரவாளர் ’கமல்’ என்று ராஜா கூற காரணமென்ன?
'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற பெயரில் தமிழ் வார இதழான ஆனந்த விகடன் இதழில் நடிகர் கமல்ஹாசன் தொடர் ஒன்றை எழுதிவருகிறார்.
இதுவரை 5 தொடர்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வாரம் பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு அதுசார்ந்த கருத்துகளையும், அறிவுரைகளையும் கட்டுரையில் அவர் எழுதி வருகிறார்.
மேலும், சமூகத்திற்கு பயனுள்ள வகையில் இயங்கும் நபர்களையும் தனது கட்டுரையில் அடையாளம் காட்டி வருகிறார்.
அவர் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடலாம் என்று கருதப்படும் நிலையில், அவரது ட்விட்டர் குறிப்புகளும் இந்தத் தொடரும் அரசியல் நோக்கர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வாரம் வெளியாகியுள்ள தொடரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கமல்ஹாசனிடம் கேட்டிருக்கும் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ள கமல், ''எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்? என்ற சவாலை இனி இந்து வலதுசாரியினர் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவிக்கிடக்கிறது. இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் முன்னேற்றமோ பெருமையோ அல்ல" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துகளின் பின்னணியில்தான், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கமல் ஹாசனை சாடியிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்