You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு: தாய்மாமன்கள் குற்றவாளி என தீர்ப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பெற்றெடுத்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், அக்குழந்தையின் மாமன்மார்கள் இருவரும் குற்றவாளிகள் என்று, செவ்வாயன்று, சண்டிகரில் உள்ள மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை விவரங்கள் வரும் நவம்பர் 2-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்டபோது குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்தனர்.
அவர்களில் ஒருவர் சிகப்பு நிற டி-சர்ட்டும் இன்னொருவர் நீல நிற டி-சர்ட்டும் அணிந்திருந்தனர்.
அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு - 376(2) மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் பிரிவு - 5 (I) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் இருவருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கபட வாய்ப்புள்ளது.
இந்த வழக்கின் இறுதி வாதம் திங்களன்று முடிவடைந்தது. அந்த சிறுமியின் மூத்த மாமா மீதான விசாரணை ஒரு மாதத்திலும், இளைய மாமா மீதான விசாரணை 18 நாட்களிலும் முடிந்தது.
அந்தச் சிறுமி 30 வாரகால கருவைச் சுமப்பது கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது சர்வதேச அளவிலான செய்தியானது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மூத்த மாமா முதலில் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் கருவைக் கலைக்க வேண்டும் என்று அவளது பெற்றோர் விடுத்த கோரிக்கையை, அவளது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சண்டிகரில் உள்ள நீதிமன்றம் நிராகரித்தது. பெற்றோரின் மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றமும், அதே காரணத்தைக் கூறி கரு கலைப்புக்கு அனுமதி வழங்க மறுத்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அச்சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது .
குழந்தை பிறந்தபின் குழந்தையின் டி.என்.ஏ மாதிரியும், கைது செய்யப்பட்டவரின் டி.என்.ஏ மாதிரியும் ஒத்துப் போகாததால் வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டது.
நீதிமன்ற அனுமதியுடன் சிறுமியிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்ற காவல் துறையினர், அவளின் இன்னொரு மாமாவையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டாவது நபரின் டி.என்.ஏ மாதிரி குழந்தையின் டி.என்.ஏ மாதிரியுடன் பொருந்திப்போனது.
குழந்தையைப் பெற்றெடுத்த குழந்தை - எப்போது, என்ன நடந்தது?
ஜூலை 14 - 30 வார கால கரு சிறுமியின் வயிற்றில் வளர்வதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மூத்த மாமா கைது செய்யப்பட்டார்.
ஜூலை 15 - மருத்துவக் காரணங்களால் கருவைக் கலைக்க சண்டிகர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
ஜூலை 28 - மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமும் கருக்கலைப்புக்கு அனுமதி மறுக்கிறது.
ஆகஸ்ட் 17 - சிறுமிக்கு சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
செப்டம்பர் 11 - கைது செய்யப்பட்ட மாமாவின் டி.என்.ஏ மாதிரி, குழந்தையின் டி.என்.ஏ மாதிரியுடன் வேறுபட்டிருப்பது கண்டுபிடிப்பு.
செப்டம்பர் 18 - இன்னொரு மாமாவின் டி.என்.ஏ மாதிரியை சேகரிக்க நீதிமன்றத்தை நாடுகிறது காவல் துறை.
அக்டோபர் 9 - இளைய மாவின் டி.என்.ஏ மாதிரி குழந்தையின் டி.என்.ஏ மாதிரியுடன் பொருந்திப்போகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :