You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்கள் சமூக ஊடகங்களில் எழுதுவது தீர்வாகுமா?
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி
பணிபுரியும் இடத்தில் ஒரு பெண் மறுக்கும்போது, அவரின் விருப்பத்திற்கு எதிராக ஆண் ஒருவர் அவரை தொட முயற்சித்தாலோ, உடல்ரீதியாக நெருங்க முயற்சித்தாலோ, பாலியல்ரீதியான கருத்துகளை சொன்னாலோ பெண்கள் என்ன செய்யவேண்டும்?
சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் என்று சம்பந்தப்பட்டவரின் பெயரை வெளியிடலாமா அல்லது சட்டப்படி பாலியல் துன்புறுத்துதல்களை விசாரிக்கும் 'நிறுவனத்தின் புகார்கள் குழுவில்' (Internal Complaints Committee) புகார் செய்யப்பட வேண்டுமா?
இந்த கேள்விக்கான காரணம் என்ன? பல்கலைக்கழகங்களில் படிக்கும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால், தன்னிடம் கூறுமாறு சொல்கிறார் வழக்கறிஞர் ராயா சர்கார்.
பெண்களால் அனுப்பப்பட்ட தனிப்பட்ட தகவல்களை, சம்பந்தப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிடாத அவர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் 68 பேர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறி அவர்களின் பெயர்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அவர்களில் பலர் இந்தியர்கள். பிரபல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களாக பணியாற்றும் பேராசிரியர்கள் அவர்கள்!
தவறிழைதத்தாக கூறப்படுபவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு முன்பே அவர்களிடம் இதுபற்றி பேசவில்லை, ஒப்புதலும் பெறப்படவில்லை. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய தகவலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்தும் அவர் முறையான விசாரணையோ, சட்டபூர்வமான ஆய்வுகளையோ மேற்க்கொள்ளவில்லை.
இந்த பேராசிரியர்களை அவமானப்படுத்தவேண்டும், பிற மாணவிகள் இவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக ஃபேஸ்புக்கில் பெயர்களை வெளியிட்டதாக அந்த வழக்கறிஞர் கூறுகிறார்.
எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான தகவல்கள் கிடைத்திருக்கிறது என்று தனது பதிவில் ராயா சர்கார் கூறியிருக்கிறார்.
சரி, இதுபோன்ற விவகாரங்களில், சம்பந்தப்பட்ட பெண்கள் சட்ட உதவியை நாடவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறாரா?
வெவ்வேறு கருத்துக்கள்
இது சரியா தவறா என்று பலவித கருத்துகள் பரிமாறப்படுகின்றன
ஆனால், பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் சொல்லும் பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் தடுப்பு குழுவிடம் ஏன் புகார் அளிப்பதில்லை என்பதுதான் இந்த விவாத்த்தின் மையம். சட்டரீதியான நடவடிக்கைகளை அவர்கள் ஏன் மேற்கொள்வதில்லை?
ராயா சர்காரிடம் தனக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் பற்றி கூறிய சோனல் கேலாங்க் என்ற பெண்ணிடம் பிபிசி இது குறித்து பேசியது. தனக்கு சட்ட நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாததால் வழக்கறிஞரான ராயாவிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியதாக சொன்னார் சோனல்.
தனது மூத்த பேராசிரியர் ஒருவர்மீது புகார் செய்யும் தைரியம் ஒரு மாணவிக்கு வேண்டும். அதன்பின், விசாரணைக் குழுவை எதிர்கொள்வதற்கு மாபெரும் தைரியம் வேண்டும், இதையெல்லாம்விட அமைப்புகள் இந்த விடயத்தில் மாணவர்களுக்கு ஆதரவான அணுகுமுறையை கடைபிடிப்பதில்லை என்கிறார் அவர்.
குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக தனது நண்பர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகாரளித்திருப்பதாக கூறும் அவர், அதன்மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருத்தப்படுகிறார்.
சமூக ஊடகங்களில் ஒருவரை தவறானவராக காட்டமுடியும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், "பொதுத்தளங்களில் தவறு செய்வர்களை இவ்வாறு வெளிச்சம்போட்டு காட்டுவது அவர்களை அவமானப்படுத்த மட்டுமல்ல. இதுபோன்ற பதிவுகளை பார்க்கும் பிற பெண்களுக்கு ஊக்கம் கிடைக்கிறது; இதுபோன்ற விவகாரங்களை மறைக்காமல் எளிதாக இயல்பாக மற்றவர்களுடன் உரையாட ஊக்கம் அளிக்கிறது."
சட்டங்களில் குறைபாடு இருக்கிறதா?
இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் குறைபாடு இருக்கிறதா? அவற்றின் செயல்பாடுகளை தடுப்பது ஏது?
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் நடப்பதை தடுப்பதற்கான சட்டங்கள் சமீப காலங்களின் வந்தவையே. இதற்கு அடிப்படையில் இருப்பது பல்வேறு பெண்கள் இயக்கங்களின் பல தசாப்தகால தொடர்போராட்டங்களே என்றால் அது மிகையாகாது.
1997ஆம் ஆண்டுக்குமுன், பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்துதலுக்கு உள்ளாகும் பெண்களை பாதுகாப்பதற்கான சிறப்பு சட்டங்கள் எதுவும் இல்லை.
உச்ச நீதிமன்றம் 1997இல் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது, முதல்முறையாக இதற்கான வழிமுறைகளை வெளியிட்டது, இது 2013 ஆம் ஆண்டில் சட்ட வடிவைப் பெற்றது.
சட்டத்தின்படி, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகாரை அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு பெண் தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும். விசாரணைக் குழு உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கவேண்டும். பாலியல் முறைகேடுகள் தொடர்பாக பணியாற்றிவரும் வெளிஅமைப்பு ஒன்றின் பிரதிநிதியும் குழுவில் இடம்பெறவேண்டும்.
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக பணிபுரியும் பெண்ணுரிமை ஆர்வலர் லக்ஷ்மி மூர்த்தியின் கருத்துப்படி, "இந்த சட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பெண்கள் தங்கள் பணியிடத்தில் இருந்துகொண்டே, தவறிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்று தருவதற்கான வசதிகளை அளிக்கிறது".
"அதாவது, சிறைச்சாலை, போலீஸ் என்ற கடுமையான பாதையில் இருந்து வேறுபட்டு, நீதிக்கான நடுநிலை பாதையை இது திறந்துள்ளது".
"இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண், தனது தீர்வை போலீஸ் மூலமாக தேடுவதில்லை. தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்புவதற்கான வழியை தேடுவதற்கு பதிலாக, நிறுவனமே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முயற்சியை எடுக்கிறார். தவறிழைத்தவர்கள் தங்கள் தவறை உணரவேண்டும், அவர் எச்சரிக்கப்பட வேண்டும்" என்று கூறுகிறார் லக்ஷ்மி.
ஆனால் நடைமுறையில், விசாரணை குழுவை அமைப்பதும், உறுப்பினர்களை தேர்வு செய்வதும் நிறுவனத்தின் பொறுப்பு என்பதால், நிறுவனத்தின் போக்கும், எண்ணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
பெயரளவிற்கே விசாரணைக் குழு
ஒரு குழுவிற்கு தனது புகாரை எடுத்துச் சென்ற பத்திரிகையாளர் எஸ். அகிலா, விசாரணைக் குழு என்பது கண் துடைப்பு என்று குற்றம்சாட்டுகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதற்கு பதிலாக தவறு செய்தவர்களை காப்பாற்றும் நோக்கத்திலேயே விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படுவதாக சாடுகிறார் அகிலா.
அகிலாவின் புகாரை விசாரித்த குழு, அவர் புகார் அளித்த மூத்த சக ஊழியர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.
"எங்களுடன் பணிபுரிந்த பிற பெண் ஊழியர்களும் அவருக்கு ஆதரவளிக்கும் அளவிற்கு, அவர் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். இதுபோன்ற நிலையில் சமூக ஊடகங்களில் அவரது பெயர் வெளியே வந்தால், குறைந்தபட்சம் பிற பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என்று பிபிசியிடம் பேசிய அகிலா தெரிவித்தார்.
விசாரணைக் குழுக்கள் பக்கசார்பற்றதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறும் லக்ஷ்மி, ஆனால் தனது அலுவலகத்தில் ஒரு நபருக்கு அளித்த புகாரின் விசாரணை சரியாக நடைபெற்றதாகவும், தவறு செய்தவர் தண்டிக்கப்பட்டார் என்றும் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பெயர்களை வெளியிடுவது ஒருபோதும் தீர்வாக முடியாது என்று அவர் நம்புகிறார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை இணையதளத்தில் ஒருவர் வெளிப்படுத்துவது இது முதல்முறை இல்லை என்றே சொல்லலாம். 2013-ல் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் பெயரை குறிப்பிடாமல், அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு பெண் வலைப்பதிவு ஒன்றில் எழுதியிருந்தார். அந்தப் பெண்ணும் விசாரணைக்குழுவையோ, சட்ட நடவடிக்கைகளையோ நாடவில்லை.
இந்த விவகாரம் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இதைப்பற்றி எழுதினார் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். விசாரணைக் குழு அமைக்கப்பட்டு நீதிபதி ஏ.கே கங்குலியின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
வெளிப்படையாக பேசியது மற்றும் புகார் அளிக்கும் நடைமுறையின் தொடக்கம் அதுதான்.
சோனல் கேலாங், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர். தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட பிற பெண்களை வலிமையாக்கும் சோனல், மனம் திறந்து வெளிப்படையாக பேச பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார். அதற்காக ஒரு வலைதளத்தையும் நட்த்துகிறார்.
இணையதளங்கள் மூலமாக நியாயம் கிடைக்குமா? அதற்கு பக்கவிளைவுகள் உண்டா? நியாயத்திற்கான வழி சட்ட நடைமுறைகள் மூலமாகத்தான் வரவேண்டுமா?
விவாதங்கள் வைரலாகின்றன. ஆனால் சமூக ஊடகத்தில் தங்கள் பெயரை வெளியிடாமல் பெயரை வெளியிட்டவர்கள் இனி சட்ட நடவடிக்கைளையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்