You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போலி முத்திரைத் தாள் மோசடி குற்றவாளி தெல்கி மரணம்
இந்தியாவின் மிகப்பெரிய போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் கரீம் தெல்கி பெங்களூருவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை ஒன்றில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால், தனது 56-வைத்து வயதில், வியாழனன்று, மரணமடைந்தார்.
அவர் போலியாக தயாரித்த முத்திரைத் தாள்களால் இந்தியாவின் 13 மாநிலங்களின் அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், சி.பி.ஐ மற்றும் அந்த மாநிலங்களின் காவல் துறை என யாராலும் அவர் ஏற்படுத்திய இழப்பை மதிப்பிட முடியவில்லை.
அவரது போலி முத்திரை தாள்கள் புழக்கத்தில் இருந்ததால் கர்நாடக அரசுக்கு புதிய முத்திரைத் தாள்கள் அச்சிட வேண்டிய தேவையே ஓராண்டுக்கு ஏற்படவில்லை என்று கர்நாடக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகித்த ஆர்.ஸ்ரீ குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷத் மேத்தாவால் எப்படி முத்திரைத் தாள் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று, தெல்கி வேறு வழக்கில் மும்பையில் கைதாகி சிறையில் இருந்தபோது தன்னுடன் சிறையில் இருந்த சக கைதி சொன்னபோது தெல்கிக்கும் இந்த யோசனை வந்துள்ளது.
போலி முத்திரைத் தாள்கள் மீது பாதுகாப்புக்கான அடையாளங்களை வைக்க அவர் நாசிக்கில் உள்ள அரசு அச்சகத்தில் இருந்து பழைய உபகரணங்களை வாங்கியதாக ஸ்ரீ குமார் கூறினார்.
சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவரைத் தேடும் சமயத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அவரது தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தனர்.
அப்போது, புலனாய்வு குழு அந்த தொலைபேசி உரையாடல்களை வெளியிட வேண்டும் என்று பாம்பே உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தொடுக்கப்போட்டது. ஆனால், விசாரணை அதிகாரியிடம் மட்டுமே அவை வழங்கப்படும் என்று கூறிய புலனாய்வு குழு, அவற்றை சி.பி.ஐ இடம் ஒப்படைத்தது.
அந்த வழக்கைத் தொடர்ந்தவர், நாடு முழுதும் பின்னாட்களில் பரவலாக அறியப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே.
2001-இல் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வைத்து கைது செய்யப்பட்ட தெல்கியிடம் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி முத்திரைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் கர்நாடக மாநிலத்தின் போலி முத்திரைத் தாள்களின் மதிப்பு மட்டும் ரூபாய் 3,300 கோடி என கணக்கிடப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :