You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரண் பேடியின் ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியது ஏன்?
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி 'ஷேர்' செய்த ஒரு ட்விட்டர் காணொளியால் அவர் பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
அந்தக் காணொளியில் மூதாட்டி ஒருவர் குஜராத்தி பாடலுக்கு நடனமாடுகிறார்.
அந்தக் காணொளியை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ள கிரண் பேடி, ''97 வயதில் உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாடும் இவர் நரேந்திர மோதியின் தாயார் ஹீராபென் மோதி. தனது வீட்டில் தீபாவளி கொண்டாடுகிறார்'' என்று பதிவிட்டுள்ளார்.
கிரண் பேடியின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த காணொளியில் நடனமாடும் மூதாட்டி பிரதமர் மோதியின் தாய் அல்ல என்று சிலர் ஆதாரத்துடன் தெரிவித்தார்கள்.
அதற்கு நான்கு மணி நேரத்திற்கு பிறகு தன்னிலை விளக்கம் அளித்த கிரண் பேடி, ''எனக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உற்சாகமான இந்தத் தாயை நான் வணங்குகிறேன். 97 வயதில் நானும் இவரைப் போலவே இருப்பேன் என்று நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காணொளியை யூ-ட்யூபில் தேடினால் கடந்த சில மாதங்களாக வெவ்வேறு ஊடகங்கள் இதை பதிவேற்றம் செய்துள்ளதை தெரிந்துக் கொள்ளலாம்.
ஒரு காணொளி செப்டம்பர் 30ஆம் தேதியன்றும் மற்றொரு காணொளி அக்டோபர் மூன்றாம் தேதியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த காணொளிகளில் நடனமாடுபவர் பிரதமர் நரேந்திர மோதியின் தாய் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்தக் காணொளியை பகிர்ந்த கிரண் பேடி, ஈஷா அமைப்பின் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால் கிரண் பேடி குறிப்பிட்டிருக்கும் ட்விட்டர் கணக்கில் சென்று பார்த்தால் காணொளி அங்கு காணப்படவில்லை.
கிரண் பேடியின் ட்விட்டர் குறித்து பதிவர்கள் என்ன சொல்கிறார்கள்?
@sbala13 ட்விட்டர் செய்தியில் எழுதுகிறார், ''கிரண் பேடி ஜி, இந்த வீடியோ அக்டோபர் மூன்றாம் தேதியில் இருந்து ட்விட்டரில் இருக்கிறது.''
எம்.பி ஷர்மா எழுதுகிறார், ''சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளை பகிர்ந்துக் கொண்டால் நீங்கள் உடனே பிடிபட்டு விடுவீர்கள். வாழ்க்கை முழுவதும் ஒரே புகைப்படத்தை அனுப்பிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்.''
காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருக்கும் கெளரவ் ஹீராபென்னின் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிடுகிறார், ''கிரண் பேடி, இது தவறான வழிமுறை. ஆளுநர் பதவியில் இருக்கும் நீங்கள் இவ்வாறு செய்ததற்கு வருத்தப்படவேண்டும். பிரதமரை மகிழ்விப்பதற்காக இப்படி பொய் சொல்லாதீர்கள். அந்த பெண்மணி பார்ப்பதற்கு ஹீராபென்னைப் போல இல்லை.''
@BeVoterNotFan எழுதுகிறார்- இதோ பாருங்கள், இவர் டெல்லியின் முதலமைச்சராக வரவிருந்தார்!
ராஜ் மெளலி எழுதுகிறார், ''இந்தக் காணொளி நவராத்திரியின்போது ஷேர் செய்யப்பட்டது. கிரண் பேடி, செய்தியின் ஆதாரத்தை சரிபாருங்கள்.''
உத்பல் பாடக் எழுதுகிறார், ''இந்த அழகான வீடியோ உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அதில் இருப்பவர் மோடியின் தாய் அல்ல.''
ஆனால், இந்தக் காணொளியை பலர் உண்மை என்றே நினைக்கிறார்கள். காணொளியில் இருப்பவர் மோதியின் தாய் என்றே நம்புகிறார்கள்.
ராஜ்தீப் சொல்கிறார், 'மோதிக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது என்று இப்போது புரிகிறது. மோதியின் தாய் தூண்டுதலும், உத்வேகமும் அளிப்பவர்'.
முரளிதரன் எழுதுகிறார்- இது உற்சாகமளிக்கிறது. அதிலும் 97 வயதில் இந்த அளவு சக்தி ஆச்சரியமளிக்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்