You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
என் பயிரைத் தாக்கிய பூச்சி எது, செல்பேசியே சொல்...
விவசாயம் செய்து அதிலிருந்து லாபமீட்டுவது என்பது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு சுலபமாக இருந்ததில்லை.
வறட்சி, விளைச்சல் குறைவு, குறைந்த சந்தை விலை மற்றும் விவசாயத்தில் நவீனமயமாக்கல் இல்லாமை ஆகியன நாட்டின் ஜனத்தொகை மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகையில் சுமார் பாதியளவு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள். இச்சூழலில், பயிர் மேலாண்மை செயலிகள் விவசாயிகளுக்கு உதவுமா?
ஆந்திர பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார் விவசாயி வொருகன்டி சுரேந்திரா.
வொருகண்டி மற்றும் அவரது நூற்றுக்கணக்கான சக விவசாயிகள் தற்போது இந்த புதிய செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதிகரித்துவரும் பயிர் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்தும், அவற்றை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையையும் இந்த செயலி வழங்குகிறது.
இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும், விவசாயிகளுக்கு இதுபோன்ற ஒன்று தேவை என்றும் கூறுகிறார் வொருகண்டி.
இந்த செயலியின் பெயர் பிளான்டிக்ஸ். இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கக்கூடிய ஜெர்மனியில் அங்குள்ள விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் குழு ஒன்றினால் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
'புரோகரஸ்ஸிவ் என்விரான்மெண்டல் ஆண்ட் அக்ரிகல்ச்சுரல் டெக்னாலஜிஸ்' (பீட்) என்ற நிறுவனம் இந்த செயலி உருவாக்கத்தின் பிண்ணனியில் உள்ளது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனரான சார்லட் ஷூமன், விவசாயிகளுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அதற்காக இந்தியாவில் நிறைய களப்பணிகள் செய்தோம்.'' என்றார்.
பாபட்லா மண்டலில் உள்ள சுரேந்திராவின் கர்லபலெம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரிசி, சோளம், பருத்தி, மிளகாய் மற்றும் பிற பயிர்களை பயிர் செய்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் வாழும் விவசாயிகளில் வெறும் 20 பேரிடம் மட்டுமே சொந்தமாக ஸ்மார்ட்ஃபோன் உள்ளது. ஆனால், இவர்கள் தங்களிடம் உள்ள ஸ்மார்ட்ஃபேனை சக விவசாயிகள் உடனும் பகிர்ந்து கொண்டு, அவர்களும் தங்களது பயிரின் நிலையை படம் பிடித்து செயலியில் பதிவேற்ற உதவுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பயிரை விவசாயி புகைப்படம் எடுத்து செயலியில் பதிவேற்ற, பயிரை பாதித்துள்ள பூச்சி அல்லது நோயை செயலி கண்டறிகிறது. தன்னிடமுள்ள படத் தொகுப்பை தாமே ஒப்பிட்டு நோயைக் கண்டறிய உதவுகிறது செயலி.
ஒரு தக்காளி செடியில் உள்ள பொட்டாசியம் குறைபாடு, கோதுமை மீதுள்ள துரு நோய், அல்லது வாழை மரத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு போன்ற நோய்களை கண்டுபிடிப்பதோடு,, முடிவுகளை பகுப்பாய்வு செய்து விவசாயிகளுக்கு ஏற்ற ஆலோசனைகளையும் பிளான்டிக்ஸ் செயலி வழங்குகிறது.
செயலியின் இந்த திறன்கள் டி.என்.என். எனப்படும் ஆழமான நரம்பு போன்ற பிணைப்புகளை சார்ந்தே இருக்கிறது. உடலில் நரம்புகள் எவ்வாறு இயங்குகிறதோ அதுபோன்றே தகவல்களை செயலி செயல்முறைப்படுத்துகிறது.
''இது மனித மூளையைப் போன்று இயங்குகிறது,'' என்கிறார் பீட் அமைப்பின் தலைமை செயலதிகாரி சிமோன் ஸ்ட்ரே.
இந்தியாவில் ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்திலும், மற்ற நாடுகளில் வேறு ஐந்து மொழிகளிலும் இந்த செயலி கிடைக்கிறது.
பீட்ஸின் தகவல் களஞ்சியத்தில் கடந்த ஆண்டு ஒரு லட்சம் புகைப்படங்கள் இருந்தன. வளர்ந்து வரும் இந்தக் களஞ்சியத்தில் தற்போது சுமார் 1.5 மில்லியன் படங்கள் இருக்கின்றன. செயலியை பயன்படுத்தும் 3 லட்சம் முதல் 4 லட்சம் பயனாளர்களில் 80 சதவீதமானோர் இந்தியாவில் இருக்கிறார்கள்.
புவி சார் குறியீடு எந்த செடி எங்கு வளர்கிறது என்ற தகவலையும், அவை ஆரோக்கியமாக வளர்கிறதா என்பதையும் தெரிவிக்கிறது. வானிலையையும் பதிவுசெய்து தட்பவெட்ப நிலை குறித்த ஒரு சித்திரத்தையும் இந்த செயலியால் தரமுடியும்.
இத்தகைய அறிவு விவசாயிகளுக்கு மட்டுமின்றி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், பயிர்கள் தேவையிருக்கும் உணவுப் பொருள் தயாரிப்புத் துறைக்கும், தங்கள் நாட்டைப் பற்றிய விரிவான பார்வையைப் பெறவிரும்பும் அரசுகளுக்கும் இச் செயலி உதவியாக இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :