தமிழகத்தில் கேளிக்கை வரி குறைப்பு: தீபாவளிக்கு `புதிய படங்கள் வெளியாகும்'
தமிழ்நாட்டில் திரையரங்கக் கட்டணங்களை உயர்த்தவும் கேளிக்கை வரியை ரத்து செய்யவும் கோரி, புதிய திரைப்படங்களை வெளியிடாமல் தயாரிப்பாளர்கள் போராடிவந்த நிலையில், கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைப்பதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

கேளிக்கை வரி விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால், திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் கடந்த சில நாட்களாக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர்.
அந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இன்றும் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோருடன் விஷால், அபிராமி ராமநாதன், பிரகாஷ் ராஜ், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியையும் இவர்கள் சந்தித்துப் பேசினார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், கேளிக்கை வரியை 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதனால், தீபாவளியன்று விஜய் நடித்த மெர்சல் உள்ளிட்ட படங்கள் வெளியாகுமெனவும் அவர் கூறினார்.
மேலும், திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அங்குள்ள உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவுசெய்யும்போது ஒரு டிக்கெட்டிற்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்தும் முயற்சிகள் துவங்கியிருப்பதாகவும் விஷால் கூறினார்.
வாகன நிறுத்த கட்டணத்தைப் பொறுத்தவரை, வெளிப்படையாக கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு அதை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக திரைப்படக் கட்டணங்கள் உயர்த்தப்படாத நிலையில், அந்தக் கட்டணங்களை உயர்த்த வேண்டுமென்றும் செப்டம்பர் மாத இறுதியிலிருந்து விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டுமென்று கோரியும் அக்டோபர் ஆறாம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, கடந்த வாரம் வெளியாகவிருந்த 6 திரைப்படங்கள் நிறுத்திவைக்கப்பட்டன. அதற்கு முந்தைய வாரம் வெளியான திரைப்படங்களே தற்போது எல்லா திரையரங்குகளிலும் ஒடிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், அக்டோபர் 7ஆம் தேதியன்று திரையரங்கக் கட்டணங்களை அதிகரித்துக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவிட்டது.
அதன்படி சென்னைப் பெருநகரப் பகுதியில் உள்ள உணவகங்களுடன் கூடிய மல்ட்டிப்ளக்ஸ் மற்றும் ஏசி திரையரங்குகளில் அதிகபட்சமாக 150 ரூபாயும் குறைந்தபட்சமாக 15 ரூபாயும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
சாதாரண மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக 118.80 ரூபாயும் குறைந்தபட்சமாக 15 ரூபாயும் இருக்க வேண்டுமென்றும் அதைவிட சில வசதிகள் குறைவான மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக 106.30 ரூபாயும் குறைந்தபட்சம் 15 ரூபாயும் கட்டணம் இருக்கலாம் என்றும் அரசு தெரிவித்தது.
அதே சமயம், முனிசிபல் கழகங்களில் அதிகபட்சமாக 62.5 ரூபாயும் குறைந்தபட்சமாக பதினைந்து ரூபாயும் முனிசிபாலிடிகளில் அதிகபட்சமாக 50 ரூபாயும் குறைந்தபட்சமாக 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப் பஞ்சாயத்துகளில் அதிகபட்சமாக 18.75 ரூபாயும் குறைந்தபட்சமாக 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வால் சென்னை நகரில் உள்ள மல்டிப்ளெக்ஸ்களில் ஜிஎஸ்டியுடன் சேர்த்து டிக்கெட் கட்டணம் 192 ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இடையில் முரண்பாடு?
அதேபோல, சென்னையில் 150 ரூபாயை அதிகபட்ச கட்டணமாக அனுமதித்திருக்கும் அரசு, முனிசிபல் கழகப் பகுதிகளில் அதே வசதிகளைக் கொண்ட திரையரங்குகளில் 62.5 ரூபாயை மட்டுமே உயர்ந்தபட்ச கட்டணமாக இருக்க வேண்டும் என்று கூறியது, திரையரங்க உரிமையாளர்களிடம் பெரும் அதிருப்தியை எற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று விஷாலுடன் சென்று பேச்சு வார்த்தை நடத்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், விஷால் சென்ற பிறகு அதே இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பட மூலாதாரம், Twitter
"அரசு நிர்ணயித்திருக்கும் அதிகபட்ச கட்டணம் திருப்தியளிக்கிறது. ஏற்கனவே இருந்த கட்டணம் மிகக் குறைவாக இருந்ததால் திரையரங்க உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். இனி அந்தப் பிரச்சனை இருக்காது. ஒவ்வொரு பகுதியிலும் ரசிகர்களின் வாங்கும் திறனைப் பொறுத்து கட்டணங்களை திரையரங்க உரிமையாளர்கள் முடிவுசெய்வார்கள்" என்று அபிராமி ராமநாதன் கூறினார்.
திரையரங்கங்களில் உள்ள உணவகங்களில் அதிகபட்ச சில்லரை விலையைவிட கூடுதலாக விற்கக்கூடாது என விஷால் கூறியிருப்பது குறித்துக் கேட்டபோது, "விஷாலைப் பற்றிச் சொல்வதற்கு எங்களுக்கும் நிறைய இருக்கிறது. நாங்கள் கூடுதலான விலைக்குப் பொருட்களை விற்க மாட்டோம். அப்படி விற்றால் அரசே நடவடிக்கை எடுக்கலாம். வெளியில் ஒரு விலையும் திரையரங்கிற்குள் ஒரு விலையும் இருக்காது" என்றும் கூறினார்.
குறுக்கிட்டுப் பேசிய திரைப்பட விநியோகிஸ்தர் கூட்டமைப்பு தலைவர் செல்வின், நடிகர்கள் தங்கள் ஊதியத்தைக் குறைப்பதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்திருக்கும் நிலையில், விரைவிலேயே புதிய திரையரங்கக் கட்டணங்களை திரைப்பட உரிமையாளர்கள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தின் காரணமாக இரண்டாவது வாரமாக இந்த வாரமும் புதிய படங்கள் வெளியாகாததால், முன்பே வெளியாகி ஓடி முடித்த தரமணி போன்ற படங்களை திரையரங்க உரிமையாளர்கள் இன்று மீண்டும் திரையிட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- இலங்கை அரசியல் கைதிகளுக்காக கடையடைப்பு: கோரிக்கை என்ன? பின்னணி என்ன?
- சமூக நீதியின் ஜாம்பவான்கள் திராவிடக் கட்சிகளா, கம்யூனிஸ்டுகளா?
- ‘ஜெனரல் டயரே திரும்பி போ’: அமித் ஷா-வுக்கு எதிராக குஜராத்தில் ஒலிக்கும் கோஷம்
- தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்?
- யுனெஸ்கோவில் இருந்து விலகிய அமெரிக்கா, இஸ்ரேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














