You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: ஓ.பி.எஸ், ரஜினி, கமல் பங்கேற்பு
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார்.
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்பட பல நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாநில அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல் ஹாசன் பேசுகையில், '' நடிகர் திலகம் சிவாஜி, மாநில, தேசிய மற்றும் ஆசிய எல்லைகளை கடந்தவர். இந்த விழாவுக்கு யார் தடுத்திருந்தாலும் நான் வந்திருப்பேன்'' என்று பேசினார்.
''மாநிலத்தில் எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். எப்போதும் மக்களின் நினைவுகளில் வாழ்பவர் சிவாஜி கணேசன்'' என்றும் கமல் ஹாசன் புகழாரம் சூட்டினார்.
'அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமலுக்கு தெரியும்'
சிவாஜி சிலையமைத்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மேலும் உரையாற்றுகையில், '' சிவாஜி தேர்தலில் நின்று தோல்வியுற்றது அவருக்கு நேர்ந்த அவமானம் அல்ல. மக்களுக்குத்தான் அது அவமானம்'' என்று தெரிவித்தார்.
அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், தனக்கு தெரியாது என்று கூறிய ரஜினிகாந்த், அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமல் ஹாசனுக்கு தெரிந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்த விழாவில் பேசிய நடிகர் பிரபு, சிவாஜிகணேசனின் சிலையை கடற்கரையில் நிறுவியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆகையால், அவரது பெயரை இந்த மணி மண்டபத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ''தனது திரையுலக வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளவர் சிவாஜி கணேசன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவபெருமான் போன்றோரை நாம் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று திரையில் வாழ்ந்து காட்டியவர் சிவாஜி'' என்று சிவாஜிக்கு புகழாரம் சூட்டினார்.
தொடர்பான செய்திகள்:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்