You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை
மலேசியாவில் உள்ள ஒரு ஆடை வெளுப்பு நிலையம் தங்கள் சேவைகளை முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குவதாக வெளியிட்ட அறிவிப்பு, அந்நாட்டில் ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது.
மலேசியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இஸ்லாம் மதத்தை கடைபிடிக்கின்றனர்.
மலேசியாவின் ஜோஹோர் மாநிலத்தில் உள்ள ஒரு ஆடை வெளுப்பு நிலையத்தின் விளம்பரப்பலகையின் புகைப்படம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் சமூகவலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டது.
''தூய்மை காரணங்களுக்காக முஸ்லீம் வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே இந்த ஆடை வெளுப்பு நிலையம் ஆடைகளை பெறும். ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் வருந்துகிறோம்'' என்று அந்த விளம்பரப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது பெயரை கூற விரும்பாத ஆடை வெளுப்பு நிலையத்தின் உரிமையாளர் தி ஸ்டார் செய்தித்தாளிடம் பேசுகையில், ''முஸ்லீம்களை பொறுத்தவரை ஆடைகள் மட்டுமல்ல முழுவதும் தூய்மையாக இருக்கவேண்டும். அதற்கு நான் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
தனது வாடிக்கையாளர்கள் இது போன்ற ஒரு சேவையை வேண்டி கேட்டுக்கொண்டதாக மலேஷியன் இன்சைட் வலைதளத்திடம் அவர் கூறியுள்ளார்.
இந்த மாகாணத்தின் சுல்தானான சுல்தான் இப்ராஹிம் இப்னி சுல்தான் இஸ்காண்டர் உள்பட பல மலேசியர்கள் (முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதோர் என இரு பிரிவுகளையும் சேர்த்து) இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அரச குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்த சுல்தான், உடனடியாக இந்த பாரபட்சத்தை நிறுத்தாவிட்டால், இந்த ஆடை வெளுப்பு நிலையம் மூடப்படும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து தி ஸ்டார் செய்தித்தாளிடம் அவர் கருத்து தெரிவிக்கையில், ''இது தாலிபன் அரசு ஆளும் மாநிலம் அல்ல. ஜோஹோர் மாநில இஸ்லாமிய தலைவராக இந்த செயலை முற்றிலும் ஏற்க முடியாததாக நான் உணர்கிறேன். இந்த விளம்பரப்பலகை அறிவிப்பில் தீவிரவாதத்தின் சாயல் உள்ளது'' என்று கூறினார்.
இந்த சம்பவம் மலேசியாவில் சமூகவலைத்தளங்களில் பல எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.
ட்விட்டர் வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு, ''தூய்மை என்ற காரணத்தை சாக்காக வைத்து முஸ்லீம் அல்லாதோருக்கு சேவை மறுப்பது இஸ்லாமின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும்'' என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த விஷயம் தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்பட்டதாக வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
'சீனர்களுக்கு மட்டும்' அறிவிப்பு சரியா?
''முஸ்லீம்களுக்கு மட்டுமே என்ற அறிவிப்பால் பல சீனர்கள் கோபமடைந்துள்ளதாக கூறுகின்றார்கள். இவர்கள் தங்களின் சக சீனர்கள் அவர்களின் வீடுகளை 'சீனர்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் வாடகைக்கு விடுவதை பார்ப்பதில்லையா?'' என்று ஒரு டிவிட்டர் பதிவு வினவியுள்ளது.
தனது சேவையை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் வழங்கும் உரிமை அந்த ஆடை வெளுப்பு நிலையத்தின் உரிமையாளருக்கு உண்டு என்று சிலர் வாதிட்டாலும், அனைவரும் இதனை ஏற்கவில்லை.
சுல்தான் இப்ராஹிமின் எச்சரிக்கையை தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்ட ஆடை வெளுப்பு நிலையத்தின் உரிமையாளர், தனது கடையின் முன்பு இருந்த சர்ச்சைக்குரிய அந்த விளம்பரப்பலகையை நீக்கிவிட்டார்.
இந்த சர்ச்சை தணியத் தொடங்கிய அதே வேளையில், இதே அறிபோன்ற ஒரு அறிவிப்பை மலேசியாவின் மற்றொரு மாநிலத்தில் வேறொரு ஆடை வெளுப்பு நிலையம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :