You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ராவணன்' இறந்ததற்கு துக்கம் அனுசரிப்பு; முதல் ராமாயணத் தொடர் குறித்த 9 சுவாரஸ்ய தகவல்கள்
இந்தியாவில் பெரும்பாலும் அனைவரும் நவராத்திரி திருவிழாவின்போது எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் 'ராம்லீலா' நிகழ்ச்சிகளை பார்த்திருக்கலாம்.
நேரில் இல்லாவிட்டால் இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த ராமாயணத்தையோ அல்லது வேறு ராமாயண நாடகங்களையோ பார்த்திருக்கலாம்.
மிகவும் பிரபலமான ராமானந்த் சாகரின் ராமாயணத் தொடர் தொடர்பான சில சுவையான தகவல்கள் புகைப்படங்களின் மூலமாக…
- ராமாயணத்தின் 78 அத்தியாயங்கள் முடிந்தபிறகு, ராமரின் புதல்வர்களான லவ மற்றும் குஸாவின் கதை வேண்டும் என்று நேயர்கள் கோரிக்கை விடுத்தனர். தனது தொலைகாட்சித் தொடரில் ராமானந்த சாகர் இந்த பகுதியை சேர்க்க விரும்பவில்லை. லவ-குஸா கதையை சேர்த்தால் அதுவொரு கற்பனை கதையாக இருக்கும் என்று அவர் கருதினார். பிறகு தொலைக்காட்சியில் லவ-குஸா கதை வந்தபோது பல சர்ச்சைகளும் எழுந்தன; அது தொடர்பாக ராமானந்த் சாகர் பத்து ஆண்டுகள்வரை நீதிமன்ற வழக்குகளை எதிர்க்கொள்ள நேர்ந்தது.
- 1980களில், ராமாயண தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியபோது, பல சிறப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. அனுமார் சஞ்சீவனி மலையை தூக்கி வருவது, புஷ்பக விமானத்தைத் தூக்கி எறிவது போன்றவையும் அவற்றில் அடங்கும்.
- ராமாயண தொலைக்காட்சி தொடரின்போது, பல இளநிலை கலைஞர்கள் தேவைப்பட்டனர். அப்போது, கிராமங்கள்தோறும் சென்று தண்டோரா போட்டு, ராமாயணத்தில் நடிக்க விரும்புபவர்கள் முன்வரலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டதாக பிரேம் சாகர் கூறுகிறார்.
- "ஸ்பெஷல் எஃபெக்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ள, ஹாலிவுட்டில் உண்மையான கிங் காங் திரைப்பட தயாரிப்பாளரை சென்று சந்தித்து வந்ததாக பிரேம் சாகர் சொல்கிறார். இதைத்தவிர பல புத்தகங்களை படித்து, சிறப்பான முறையில் ஸ்பெஷல் எஃபெக்டுகள் தொலைகாட்சித் தொடரில் சேர்க்கப்பட்டது.
- ஐந்து கண்டங்களில் ஒளிபரப்பப்பட்ட ராமானந்த் சாகரின் ராமாயண தொலைக்காட்சித் தொடரை உலகம் முழுவதும் இருந்து 65 மில்லியன் மக்கள் கண்டுகளித்தனர்.
- ராமாயண நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் சமயத்தில் உயரதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள்வரை யாருமே வேறு எந்த வேலையில் ஈடுபடுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு சாமானிய மக்களின் நிலை பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா? தொலைபேசியில் பேசுவதைகூட மக்கள் தவிர்ப்பார்களாம்!
- ஒவ்வொரு வாரமும் தொலைகாட்சித் தொடர் பதிவு செய்யப்பட்ட வீடியோ கேசட், தூர்தர்ஷன் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். பலமுறை நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் அரை மணி நேரத்திற்கு முன்புதான் கேசட் தூர்தர்ஷன் தொலைகாட்சி நிலையத்தை சென்றடையுமாம். ஆனால், மக்கள் காலையில் எழுந்ததிலிருந்தே மற்ற வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டு தொலைகாட்சியின் முன் காத்திருக்கத் தொடங்கிவிடுவார்களாம். இந்தத் தொடருக்காக தொடர்ந்து 550 நாட்களுக்கு மேலாக படபிடிப்பு நீடித்தது.
- ராமாயண தொலைகாட்சித் தொடரில் ராவணன் இறக்கும் காட்சிகள் காட்டப்பட்டபோது, ராவணனின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அர்விந்த் திரிவேதியின் சொந்த கிராமத்தில் மக்கள் துக்கம் அனுஷ்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராமானந்த் சாகரின் தொலைகாட்சித் தொடருக்காக ராமர் பாலம் கட்டுவது தொடர்பான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. சென்னையில் காணப்படுவது போன்ற நீலக்கடல் குஜராத்தில் காணப்படவில்லை. அதனால், சென்னையில் படபிடிப்பு நடத்தப்பட்டதாக பிரேம் சாகர் விளக்குகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்