You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கௌரி லங்கேஷ் கொலை: நீதிகேட்டு பெங்களூரில் பல்லாயிரம் பேர் பேரணி
வகுப்புவாதத்துக்கு எதிராகத் துணிச்சலாக எழுதியவந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலைக்கு நீதிகேட்டு பெங்களூரில் நடந்த போராட்டத்தில், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலர் 'நான் கௌரி' என்ற வாசகம் பொறித்த தட்டியை ஏந்தியிருந்தனர். வேறு சிலரோ பேச்சுரிமையை வலியுறுத்தும் கவிதைகளை வாசித்தனர்.
இம்மாதம் 5ம் தேதி பெங்களூரில் தனது வீட்டுக்கு வெளியே கொரி சுட்டுக் கொல்லப்பட்டார். கௌரியின் கொலை குறித்துப் போலீசார் விசாரித்துவந்தாலும் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்தக் கொலையைக் கண்டித்து இந்தியாவின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தாலும், கொளரியின் சொந்த நகரில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்து அடிப்படைவாதத்துக்கு எதிராக...
இந்து அடிப்படைவாதம் பற்றித் தீவிரமாக விமர்சித்துவந்த கௌரி, சாதியமைப்பை கடுமையாகச் சாடிவந்தார்.
அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் விதமாகவும் அவர் எழுதினார்.
21 சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பேரணி, பெங்களூரின் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கியது.
போராட்டப் பாடல்களைப் பாடியபடியும், முழக்கங்கள் எழுப்பியபடியும் போராட்டக்காரர்கள் பேரணியில் நடந்துவந்தார்கள்.
'கௌரி லங்கேஷ் நீடு வாழ்க' என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
எதனால் இந்தக் கொலை நடந்தது என்பது உறுதியாகத் தெரியாது ஆனால், போராட்டத்தில் கோபமும் ஆத்திரமும் போராட்டத்தில் தெரித்தது என்கிறார் பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷி.
நீதிகேட்டுப் பலர் பதாகைகள் ஏந்திவந்தனர். விரித்த குடைகளைக் கொண்டு செய்யப்பட்ட கலைவடிவத்தை சில போராட்டக்காரர்கள் சேர்ந்து செய்திருந்தனர். அந்தக் குடைகளில் கௌரியின் கொலையைக் கண்டிக்கும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
நமது வாயை அடைக்க முடியாது
சி.பி.எம். தலைவர் சீதாராம் எச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் உரையாற்றினார்கள்.
'நான் கௌரி' என்று சொல்வது நமது வாயை அடைக்க முடியாது என்பதை வலியுறுத்தும் வாசகம். சமத்துவ, மதச்சார்பற்ற இந்தியா என்னும் கருத்து இன்னும் உயிருடனே இருக்கிறது என்றார் எச்சூரி.
"நீ வரும்வரை காத்திருக்கமாட்டோம். உனக்கு முன்பாக வந்து நிற்போம். யாரையெல்லாம் நீ குறிவைப்பாய்" என்று கேட்டார் வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் ராகேஷ் ஷர்மா என்பவர்.
99 வயதுப் போராளி
விடுதலைப் போராட்ட வீரரான எச்.எஸ்.தொரேஸ்வாமி பேசுகையில் இப்போதிருந்து புதுயுகம் தொடங்கவேண்டும் என்றார்.
"99 வயதில் மாற்றத்துக்காக என்னால் போராட முடியுமென்றால் உங்களால் ஏன் முடியாது" என்று கேட்டார் அவர்.
பிரபல பத்திரிகையாளர் பி.சாய்நாத், அரசியல் தலைவர் ராஜீவ் கௌடா, சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், பெண்ணுரிமை பிரசாரகர் கவிதா கிருஷ்ணன் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
"பேச்சுரிமை என்பதற்கு எந்த மதிப்பும் இனி இல்லை. உங்கள் கருத்தை நீங்கள் சுதந்திரமாக வெளிப்படுத்தினால் நீங்கள் கொல்லப்படவும்கூடும்," என பிபிசியிடம் கூறினார் போராட்டத்தில் பங்கேற்ற மாணவியான பியர்ல் கேப்ரியல்.
பத்திரிகையாளர் பாதுகாப்பில் பரிதாப நிலை
கமிட்டி டூ புரொட்டக் ஜர்னலிஸ்ட்ஸ் (சிபிஜே) என்ற அரசு சாரா அமைப்பு, பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் மிக மோசமான நிலையில் உள்ள நாடு என இந்தியாவை தரப்படுத்தியுள்ளது. 1992ல் இருந்து அவர்களது பணி நிமித்தமாக 27 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்கிறது அவர்களது ஆராய்ச்சி.
பிற செய்திகள்:
- வட கொரியா மீது புதிய தடைகள்: ஐ.நா. விதிப்பு
- தன் மீதான பாலியல்ரீதியான துன்புறுத்தலை தானே பதிவு செய்த பெண்
- இலங்கை: சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட்ட யானை மரணம்
- பள்ளியில் இறந்து கிடந்த சிறுவன்: கேள்விக்குள்ளாகும் மாணவர்களின் பாதுகாப்பு
- ஷரியாவில் தலையிட அனுமதிக்கமுடியாது: அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :