`நீட்' தேர்வு முறைக்கு எதிராக பணியை ராஜிநாமா செய்த அரசுப்பள்ளி ஆசிரியை

கட்டாய நீட் தேர்வு காரணமாக தற்கொலைசெய்து கொண்டதாகக் கூறப்படும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்பதுடன் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுவதுதான் தேசபக்தி என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விழுப்புரம் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா தெரிவித்துள்ளார்.

பதினைந்து ஆண்டுகளாக அரசுப்பள்ளியில் வேலைசெய்யும் ஆசிரியர் சபரிமாலா, நேற்று (புதன்கிழமை) அவர் பணிபுரிந்த பள்ளிமுன்பாக தனது ஏழுவயது குழந்தையுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். வியாழக்கிழமையன்று தனது ராஜிநாமா கடிதத்தை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் அளித்துவிட்டதாகத் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில், வருத்தத்துடன் தனது ஆசிரியர் பணியை விட்டு விலகுவதாக எழுதி ராஜிநாமா கடிதத்தை அளித்ததாகக் கூறுகிறார் சபரிமாலா.

விழுப்புரம் மாவட்டத்தில் வைரபுரம் பள்ளியில் போராட்டம் நடத்திய ஆசிரியை சபரிமாலா, பிபிசிதமிழிடம் பேசியபோது, அறம் செய்ய விரும்பு என்று பாடம் கற்றுத் தருவதோடு நிறுத்திக்கொண்டு, மாணவர்களுக்காகக் குரல் கொடுக்காமல் இருந்தால், ஆசிரியராகப் பணிபுரிவதில் எந்த நன்மையும் இல்லை என்றார்.

''மாணவர்களுக்காக அவர்கள் மட்டுமே போராடுகிறார்கள். ஆசிரியர் அமைப்புகள் சம்பளத்தை உயர்த்துங்கள் என்று போராடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடினால் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாகவேண்டும் என்ற நிலைவரும்,'' என்றார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு சபரிமாலாவின் ராஜிநாமா எந்தவிதத்தில் பயன்தரும் என்று கேட்டபோது, ''பாடங்களை கரும்பலகையில் எழுதிப்போடும் ஆசிரியராக, சம்பளத்திற்கு வேலை செய்யும் பணியாளாக மட்டுமே ஓர் ஆசிரியர் இருக்கமாட்டார். அவர் மாணவர்களின் நலனுக்காகப் போராடுவார் என்ற எண்ணம் மாணவர்களை பலப்படுத்தும்,'' என்று சபரிமாலா கூறினார்.

நீட் தேர்வை எதிர்ப்பது ஏன் என்று கேட்டபோது, ''நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இல்லாத நேரத்தில், ஒரே மாதிரியான தேர்வை எழுதவேண்டும் என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஒரே பாடத்திட்டம் கொண்டுவந்த பிறகு, ஒரே மாதிரியான தேர்வை நடத்தினால், தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்,'' என்றார்.

சபரிமாலாவின் போராட்டத்திற்கு இளைஞர்கள், மாணவ அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆசிரியர்கள் தங்களது வேலைக்குப் பிரச்சனை வரும் என்பதால் நேரடியாக ஆதரவு தெரிவிக்காமல் இருந்தாலும், தொலைபேசி வழியாக ஆதரவு தெரிவித்தார்கள் என்கிறார் சபரிமாலா.

அனிதாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தால் போராட்டத்தில் இறங்கியுள்ள ஆசிரியர் சபரிமாலா தனது குழந்தை ஜெயசோழனை அவர் பணிபுரிந்த அரசுப்பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.

''நான் போராடுவது என் குழந்தையைப் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்காக என்பது எல்லோருக்கும் புரியும். உனக்கான உரிமையைக் கேட்க நீ முன்வரவேண்டும் என்பதை சொல்லிக்கொடுப்பதுதான் கல்வி. மற்றவை எல்லாம் வெறும் மதிப்பெண் பெறுவதற்கான பாடங்கள்,'' என்றார் சபரிமாலா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :