அனிதா மரணத்தையொட்டி தமிழகத்தில் 6-ஆவது நாளாக தொடரும் போராட்டம்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா மரணத்தையடுத்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் கடந்த ஆறாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை)தொடர்ந்து நடந்துவருகிறது.

இன்று காலையில் மதுரையில் தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக திடீரெனக் குவிந்த சுமார் 500 மாணவர்கள், மைதானத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,.

இதையடுத்து அங்கிருந்து மாணவர்களை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சிசெய்தது. இதனால், அங்கிருந்த தமிழன்னை சிலையின் மீது ஏறிய மாணவர்கள் அங்கிருந்து இறங்க மறுத்து கோஷமிட்டனர்.

அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்ற மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவரும் ஒரு காவலரும் காயமடைந்தனர். பிறகு, இந்த மாணவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் புதுக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, டாக்டர் அம்பேத்கா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அரியலூர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரிக்கு வெளியில் அமர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :