அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

"அந்தரங்கத்துக்கான உரிமை" என்பது அரசியலமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அங்கமே என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

இது தொடர்பாக முந்தைய காலகட்டங்களில் இரு வேறு வழக்குகளில் ஆறு நீதிபதிகள் மற்றும் எட்டு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுகள் "அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையாகாது" என்று கூறியிருந்தன.

இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அந்தரங்கம் என்பதும் அடிப்படை உரிமைக்குள் அடக்கம் என்று கூறியுள்ளது.

முக்கிய அம்சங்கள் என்ன?

தனது தீர்ப்பின் பொதுவான அம்சங்கள் அடங்கிய பத்திகளை மட்டும் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கெஹர் வாசித்தார்.

அதில், "அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையாகும். அரசியலமைப்பின் 21-ஆவது விதி, தனி நபர் பாதுகாப்பு, சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. அந்த வகையில் அந்தரங்கமும் தனி நபர் பாதுகாப்பு, சுதந்திரத்தின் அங்கம்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், 1954-ஆம் ஆண்டில் எட்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் "அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை ஆகாது" என்று கூறியிருப்பது சரியானது அல்ல என்றும் 1962-ஆம் ஆண்டில் ஆறு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் அந்தரங்கத்தை அடிப்படை உரிமையில் இருந்து பிரித்து அடையாளம் காட்டியிருப்பதும் சரியானது அல்ல" என்று கெஹர் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.

ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், எஸ். அப்துல் நசீர், ஆர்.கே.அகர்வால், ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், ஏ.எம்.சாப்ரே, டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கிஷண் கெளல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தீர்ப்பின் விளைவால் தற்போது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் ஆதார் பதிவு முறையில் தாக்கம் இருக்கும் என்று சமூக பயன்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

மத்தியில் இதற்கு முன்பு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, குடிமக்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்காக "பயோமெட்ரிக்" முறையில் விவரங்களை சேகரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விவரங்களை தெரிவிப்பதால் தங்களின் அந்தரங்க தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்து கர்நாடகா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி உள்பட ஏராளமான மனுதாரர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு பின்னர் 2015-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த விவகாரத்தை கடந்த ஜூலை 18-ஆம் தேதி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "1954-ஆம் ஆண்டில் எம்.பி. சர்மா, 1962-ஆம் ஆண்டில் கரக் சிங் ஆகிய மனுதாரர்களின் வழக்கில் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையாகாது என்று ஏற்கெனவே எட்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மாற்றினார்.

அதன் பிறகு கடந்த ஜூலை 19-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு மனுதாரர்கள், மத்திய அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன. இந்த வாதங்கள் கடந்த 2-ஆம் தேதி முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முன்வைத்த வாதத்தின்போது, "அந்தரங்கம் என்பதை அடிப்படை உரிமையாகக் கருதினாலும் அதில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும், "ஒரு தனி நபரின் ஒவ்வொரு அந்தரங்க செயலையும் அடிப்படை உரிமையாகக் கருத முடியாது என்றும் சுதந்திரத்தின் வெவ்வேறு செயல்பாடுகளுக்கும் வெவ்வேறு தன்மை உள்ளது" என்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :