You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அந்தரங்கத்துக்கான உரிமைக்கு விளக்கம் என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி
அந்தரங்கத்துக்கான உரிமை எது என்பதை விளக்க முற்பட்டால் நன்மையை விட தீமைகளே அதிகமாக இருக்கும் என்று இந்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு,் தொடர்ந்துள்ள மனுதாரர்களிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை எழுப்பியது.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் அடிப்படை சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கர்நாடக மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி புட்டாசாமி, சமூக செயற்பாட்டாளர் அருணா ராய் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ரோஹின்டன் ஃபாலி நாரிமன், ஏ.எம்.சாப்ரே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கெளல், எஸ். அப்துல் நசீர் ஆகிய ஒன்பது பேர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இதில், ஆதார் எண்ணை பதிவு செய்ய மக்களை அரசு நிர்பந்தப்படுத்தும் நடவடிக்கை, மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பது போல் ஆகும் என்ற மனுதாரரின் முறையீடு குறித்து ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் கடந்த திங்கள்கிழமை கூறினார்.
அதற்கு முன்பாக, அந்தரங்கத்துக்கான உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகுமா? அது புனிதமானதா? அரசியலமைப்பில் தனி நபர் உரிமைக்கு பாதுகாப்பு உள்ளதா? போன்றவை குறித்து ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி கெஹர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை புதன்கிழமை தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள்
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியன், சோலி சொராப்ஜி, ஷியாம் திவான் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
கோபால் சுப்ரமணியம் வாதிடும்போது, குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துடன் அந்தரங்கத்துக்கும் தொடர்பு உள்ளது என்றார்.
தனி மனித வாழ்க்கைக்கும் சுதந்திரத்துக்கும் என குறிப்பிட்ட ஓர் உரிமையை அரசியலமைப்பு வழங்காவிட்டாலும், இயல்பாகவே மனிதர்களுக்கு உள்ள அந்த உரிமையை அரசியலமைப்பு அங்கீகரித்துள்ளது என்று கோபால் சுப்ரமணியன் குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவு, அந்தரங்கத்தைக் காப்பதை உத்தரவாதமாக மட்டுமின்றி கடமையாகவும் கொண்டுள்ளது என்று அவர் வாதிட்டார்.
சோலி சொராப்ஜி வாதிடுகையில், அரசியலமைப்பின் எந்தவொரு பகுதியிலும் அந்தரங்கத்துக்கான உரிமை பற்றிக் குறிப்பிடவில்லை என்பதற்காக அப்படி ஒன்றே இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
ஷியாம் திவான் வாதிடும்போது, 1975-ஆம் ஆண்டு முதல் அந்தரங்கத்துக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. எனது உடல் நாட்டுக்கு சொந்தம் என்பது சர்வாதிகார நாட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.
முன்னதாக, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோகர் (அட்டார்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால் வாதிடும்போது, அந்தரங்கத்துக்கான உரிமை என்பது வெறும் பொதுவான உரிமைதான் என்றும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், மிகவும் கவனத்துடன் அதை அடிப்படை உரிமைகளின் அங்கமாக சேர்க்காமல் தவிர்த்துள்ளனர் என்றார்.
நீதிபதிகள் கேள்வி
இதையடுத்து நீதிபதி ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், "அந்தரங்கத்துக்கான உரிமை பாதுகாப்பு என்பது அடிப்படை சட்டத்தை விட மேலானதா?" என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, "குடிமக்கள் மீது நியாயமான காரணங்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களை ஓர் அரசு இயற்றுவதை தடுக்க முடியாது. அந்தரங்கத்துக்கான உரிமை என்பது குறிப்பிட்டு உருவகப்படுத்த முடியாத வார்த்தை. அதை விளக்க முற்பட்டால் நன்மையை விட தீமையே அதிகமாக இருக்கும் என்று கருதுகிறேன்" என்று கூறினார்.
நீதிபதி சந்திரசூட் குறிப்பிடுகையில், "அந்தரங்கத்துக்கான உரிமை அல்லது ரகசியங்கள் என்ன என்பதை எவ்வாறு விளக்க முடியும்? அதன் பொருளாக்கம் மற்றும் வரையறைகள் என்ன? ஓர் அரசால் தனியுரிமையை எவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்த முடியும்? அந்தரங்கத்துக்கான உரிமையைப் பாதுகாப்பதில் ஓர் அரசின் கடமை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும்" என்று கூறினார்.
"தொழில்நுட்பத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களைப் பற்றிய விவரங்களை பொதுப்படையாக வெளியிடும் செயல், அந்தரங்கத்துக்கான உரிமையில் சமரசம் செய்து கொள்வதாகாதா?" என்றும் அவர் மனுதாரர்களின் வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார்.
ஒத்திவைப்பு
நீதிபதிகளின் கேள்விகளைத் தொடர்ந்து, மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க அரசின் தலைமை சட்ட ஆலோசகர் கே.கே.வேணுகோபால் அவகாசம் கோரினார்.
இதையடுத்து வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்