You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரவில் பெண்கள் வெளியே நடமாட தடைபோடுவது சட்டமா, சமூகமா?
காரில் சென்று கொண்டிருந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு, பாஜக பிரமுகரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், இரவு நேரங்களில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.
ஹரியாணா மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மகளான பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹரியாணா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா என்பவரின் மகனான விகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாநில பாஜக பிரமுகரான ராம்வீர் பாஹ்டி,`புகார் அளித்துள்ள அந்த பெண் ஏன் இரவு 12 மணிக்கு மேல் வெளியில் வர வேண்டும்?தனது மகள் இரவு வீட்டிற்கு வந்துவிட்டாரா அல்லது வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை` என கருத்து தெரிவித்தார்.
ஆனால் பாஹ்டியின் இந்த கருத்துக்கு பெண்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் செல்வது அவர்களின் உரிமை, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பது போன்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பதிவிடப்பட்டன.
இதே கருத்தை வலியுறுத்தும் வகையில், நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா,#AintNoCinderella என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இரவு நேரத்தில் தான் வெளியில் செல்லும் புகைப்படத்தை இணைத்து டிவிட்டரில் பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து #AintNoCinderella என்ற ஹேஷ்டேக்கின் கீழ், இரவு நேரங்களில் வெளி இடங்களில் தாங்கள் இருக்கக் கூடிய புகைப்படங்களை பல பெண்கள் பதிவிடத் தொடங்கினர். மேலும் இரவு நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வது, பெண்களின் உரிமை என்பதை பிரதிபலிக்கும் பல கருத்துகளும் சமூக வலைத்தள பக்கங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
`ஏன் பெண்கள் நள்ளிரவுக்கு மேல் வெளியில் செல்லக்கூடாது? நாங்கள் வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது என தடை போட பஹ்டி போன்ற ஆட்கள் யார்? இதெல்லாம் ஒரு பிற்போக்கான மனநிலை.` என பிபிசியிடம் ரம்யா தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை பிரதிபலித்துள்ள நடிகை கஸ்தூரி, ''அரசியல் தலைவர்கள் சிலர் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என வெளியிடும் கருத்துகள் எல்லாம் , அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்தை காட்டுகிறது.'' என கூறுகிறார்.
``பாலியல் தொல்லைகள் குறித்த பிரச்சனை எழும்போதெல்லாம், யாராவது சிலர் பெண்கள்தான் ஆண்களை தூண்டுகிறார்கள் என கருத்து சொல்வது வழக்கமாகிவிட்டது. இந்த நாட்டில் 8 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கூட நடந்திருக்கிறது. அப்படியென்றால் அந்த பெண் குழந்தை ஆண்களை தூண்டிவிட்டது என கூற முடியுமா? ஹரியாணா இளம்பெண்ணிற்கு நடைபெற்றுள்ள அநீதி வெட்கித் தலைகுனிய வேண்டியது. நாட்டில் பெண்களுக்கு இன்னும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.` என கஸ்தூரி கூறுகிறார்.
பாலியல் தொல்லை குறித்த சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், அதற்கான இயற்றப்பட்ட சட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதில்லை என்பதே பல பெண்ணுரிமை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான சட்பிர் பேடி, வேலையிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து 69 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
வேலையிடங்கள் மட்டுமல்லாது பொது இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களும் காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவதாக கூறும் பெண்ணுரிமை ஆர்வலர் சுதா ரகுராமன், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சூழலை எப்படி எதிர்கொள்ளலாம்? என்பது குறித்தும் சில ஆலோசனைகளை அளித்தார்.
`பெரும்பாலும் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள், காவல்துறையில் புகார் அளிக்க தயங்குகின்றனர் அல்லது பயப்படுகின்றனர். ஒருவேளை அவர்கள் அச்சமின்றி புகார் அளிக்க காவல்நிலையம் சென்றாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் அக்கறை காட்டுவதில்லை.
எனவே பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள், உடனடியாக அந்த பகுதியில் உள்ள பெண்ணுரிமை அமைப்புகளிடம் இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்ணுரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமின்றி, இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில் தொடர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் பாலியல் தொல்லைகளில் ஈடுபடும் நபர்களுக்கு, சிறை தண்டனை குறித்த பயம் இருக்கும். காவல்துறையினரும் இது போன்ற வழக்கில் துரிதமாக செயல்படுவார்கள்.``என்கிறார் சுதா ராமலிங்கம்.
பாலியல் சீண்டல் காரணமாக உயிரிழந்த கல்லூரி மாணவி சரிகா ஷா சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், அந்த சம்பவத்தின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பிற்காக அப்போது கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், தற்போது நடைமுறையில் இல்லை என தெரிவிக்கிறார். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட பல சட்டங்களும்,நடைமுறையில் பெரிய அளவில் செயல்பாட்டில் இல்லை என அவர் கூறுகிறார்.
``சரிகா ஷா சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், ஒவ்வொரு கல்லூரியிலும் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து, பெயர் குறிப்பிடாமல் மாணவிகள் புகார் அளிக்க பெட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த திட்டம் நடைமுறையில் இல்லை. இணையதளம் வழியாக கூட பாலியல் தொல்லை குறித்து பெண்கள் புகார் அளிக்க முடியும். ஆனால் அதில் எத்தனை வழக்குகளில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?` என அவர் கேள்வி எழுப்புகிறார்.
பெண்ணுடல் குறித்த புரிதல்களை பள்ளிகளிலிருந்தே ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை முற்றிலும் தவிர்க்க முடியும் என்பதே அவரின் கருத்தாக உள்ளது.
இதனிடையே இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரை சண்டிகர் காவல்துறையினர் இன்று மாலை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 365 மற்றும் 511 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சண்டிகர் டிஜிபி தேஜிந்தர் சிங் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழில் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்