`ஏதோ செய்ய நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து காரை பின்னோக்கி செலுத்தினேன்'

ஒரு இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து குற்றத்திற்காக, ஹரியாணா மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரின் மகன் உள்பட இருவரை சண்டிகர் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் வெள்ளியன்று பின்னிரவில் நடைபெற்றது. சனியன்று காவல் துறையினரால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிடம், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 164-இன் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட இளம்பெண் ஹரியாணா மாநிலத்தில் பணிபுரியும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகளாவார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பிபிசியிடம் என்ன நடந்தது என்று விளக்கினார். அவர் கூறியதில் முக்கிய தகவல்கள் இவை:-

  • இரவு 10.30 மணியளவில் நான் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவர்கள் என்னைப் பின்தொடர ஆரம்பித்தனர்.
  • அவர்களின் காரை என் கார் மீது மோதுவதுபோல செய்து, அச்சுறுத்தி என்னை காரை நிறுத்த வைக்க முயன்றனர். ஆனால் நான் நிறுத்தவில்லை.
  • அதனால் என் கார் முன்பு அவர்கள் காரை நிறுத்தி என்னை வழி மறித்தனர்.
  • அவர்கள் விளையாடவில்லை, ஏதோ செய்ய நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்த நான் காரை பின்னோக்கி செலுத்தினேன்.
  • பின்பு காவல் துறையை அழைத்து நடந்ததைக் கூறினேன்.
  • மீண்டும் என் காரை அவர்கள் மறித்தனர். நான் கீழே இறங்குவதற்குள் என் காரை நோக்கி ஒருவன் வந்தான்.
  • என் காரின் ஜன்னல் கண்ணாடியை நொறுக்க முயன்று, கதவைத் திறக்க முயன்றான்.
  • நான் பிறரின் கவனத்தைப் பெற தொடர்ந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தேன்.
  • அப்போது காவலர்கள் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தப்பியோடமுயன்றனர்.
  • ஆனால், காவலர்கள் அவர்களைப் பிடித்துவிட்டனர். அதன் பின்பே நான் வீடு திரும்பினேன்.
  • இரவு நேரத்தில் நான் தனியாக இருக்கும் பெண் என்பதை அறிந்தே அவர்கள் என்னை நிறுத்த முயன்றனர்.
  • அப்போது சாலையிலும் அதிக நடமாட்டம் இல்லை. எனக்கு உதவவும் யாருமில்லை.
  • என் பெற்றோரை அழைத்தால் அவர்கள் வரவும் நேரமாகும்.
  • காவல் துறையை அழைப்பதுதான் எனக்கு அப்போது இருந்த ஒரே வாய்ப்பு.
  • எனக்கு அப்போது மிகவும் பயமாக இருந்தது. பேச்சே வரவில்லை.
  • நான் மட்டும் காரை நிறுத்தி இருந்தால் எல்லாம் முடிந்து போயிருக்கும்.
  • ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் போவதுதான் எனக்கு அப்போதைய தேவையாக இருந்தது.
  • காவல் துறையினர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.
  • என்னை மீட்டபோது, நான் யாரென்று அவர்களுக்குத் தெரியாது.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் பேசிய சண்டிகர் துணை காவல் கண்காணிப்பாளர் சதிஷ் குமார், "அவசர உதவி எண்ணான 100-க்கு அழைத்த ஒரு இளம் பெண், தன்னை சிலர் பின்தொடர்வதாகவும், தனது காரைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் புகார் தெரிவித்தார்" என்று கூறினார்.

"அவர்களின் கார் பதிவு எண்ணை வைத்து, சில நிமிடங்களில் விகாஷ் பராலா மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்," என்று அவர் தெரிவித்தார்.

அந்த இரு இளைஞர்களும் மது உட்கொண்டிருந்ததை மருத்துவப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சதீஷ் குமார் கூறினார். எனினும், கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விகாஷ் பராலா ஹரியாணா பாஜக தலைவரின் மகன்தான் என்று காவல் துறையினர் உடுதிப்படுத்தியுள்ளனர். விகாஷ் பராலா சண்டிகரில் தங்கி சட்டம் படித்து வருகிறார்.

ஹரியாணா பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் கருத்தை அறிய பிபிசி அவரை தொடர்பு கொண்டபோது, அவரின் செல்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :