டெல்லியில் தமிழக விவசாயிகளின் பசியைப் போக்கும் சீக்கியர்கள்

பட மூலாதாரம், MD MUSTAKIM NADAV
டெல்லி ஜந்தர் மந்தரில் இரவு பகலாக போராடி வரும் விவசாயிகளுக்கு தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கி ஆதரவு அளித்து வருகிறது குருத்வாரா பிரபந்தக் கமிட்டி.
டெல்லி பாபா கரக் சிங் மார்கில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான பங்களா சாஹிப் குருத்வாராவுக்கு நேரில் வரும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு தினமும் பாரபட்சமின்றி அன்னதானம் வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், சிறப்பு ஏற்பாடாக ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் உடல்நிலை, வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கான உணவு மட்டும், விவசாயிகள் அனுப்பி வைக்கும் பிரதிநிதி மூலம் டிரம்களில் அடைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரகாஷ், விவசாயிகளுக்கான உணவை குருத்வாராவில் இருந்து பெற்று தருகிறார்.
அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "குருத்வாரா மட்டும் இல்லையென்றால் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். பசியைப் போக்கும் குருத்வாரா நிர்வாகம், எங்களுக்கு கடவுளாக காட்சியளிக்கிறது." என்கிறார் பிரகாஷ்.

டெல்லியில் கடந்த பிப்ரவரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களுக்கு தமிழகத்தில் பிரபலமான மற்றும் டெல்லியில் இரண்டு கிளைகளையும் வைத்துள்ள தனியார் ஹோட்டலில் இருந்து மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி அமலானதால் அந்த ஹோட்டலில் இருந்து இப்போது ஆதரவு கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் "இரண்டாவது முறையாக விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லிக்கு வந்தபோது எங்களுக்கு முன்பு கிடைத்த ஆதரவு காணப்படவில்லை" என்கிறார் அய்யாக்கண்ணு.
குருத்வாராவில் இருந்து உணவு வழங்கப்படுவதைத் தடுக்க உள்ளூர் அரசியல்வாதிகள் முயன்றதாக தன்னார்வலர் பிரகாஷ் கூறுகிறார்.
ஆனால், "ஏழைகளுக்கும், வலியவர்களுக்கும் உணவு வழங்குவது எங்கள் கடமை. அதை எவ்வித சக்தியாலும் தடுக்க முடியாது. மிரட்டல் வந்தால் இரு மடங்காக எங்கள் சேவையை அளிப்போம்" என்று உறுதியுடன் கூறுகிறார் குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் மஞ்சீத் சிங்.

குருத்வாராவில் வட மாநிலங்களில் பிரபலமான சப்பாத்தி, சப்ஜி, பருப்பு (டால்) போன்ற உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
"தமிழக விவசாயிகளின் உடலுக்கு அவை ஒத்துக் கொள்ளாததை அறிந்து சில வேளையில் சாதம் பரிமாறப்படுகிறது" என்கின்றனர் குருத்வாரா பிரபந்தக் குழு சமையல் கூடத்தில் பணியாற்றும் ஊழியர்கள்.
ஒரே நேரத்தில் சுமார் 1,000 முதல் 1,500 பேர்வரை அமர்ந்து உணவருந்தக் கூடிய சமையல்கூடம் குருத்வாரா வளாகத்தில் உள்ளது.
அரிதாக இங்கு வரிசையில் உணவு சாப்பிட வருபவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது என்று அங்கு வழக்கமாக உணவுக்காக வரும் ரிக்ஷா ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்














