'விவசாயிகளின் போராட்டத்தை பாஜக சீர்குலைக்கிறது': அய்யாக்கண்ணு பகிரங்க புகார்
போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவினர் என கூறிக் கொள்ளும் சிலர் மிரட்டல் விடுப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு புகார் கூறியுள்ளார்.

ஆனால், யாருடைய தூண்டுதலின் பேரிலோ பணம் வாங்கிக் கொண்டு அய்யாக்கண்ணு டெல்லியில் போராடுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
18-ஆவது நாள் போராட்டம்
விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான குழுவினர், டெல்லியில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து இன்று பிபிசி தமிழிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், "எங்கள் போராட்டத்தை பலவீனப்படுத்த மத்தியில் ஆளும் பாஜகவினரும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கின்றனர்" என்றார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் என கூறிக் கொள்ளும் சிலர், எனது செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பிய குறுந்தகவலில் "பெரியவரே தவறு செய்கிறீர். உங்கள் குடும்பத்தார் முன்பு கோவணத்துடன் உட்கார்ந்து பார்க்கவும். விவசாயிகளின் கடன் நாங்கள் கொடுத்த வரிப்பணம். கர்நாடகா சென்று லாபகரமாக விவசாயம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்" என எச்சரிக்கை விடுக்கின்றனர் என்று, தனக்கு வந்த குறுந்தவலை காட்டி முறையிடுகிறார் அய்யாக்கண்ணு.
மேலும், சிலர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி அனுப்பிய குறுந்தகவல்களையும் அய்யாக்கண்ணு காட்டுகிறார்.
"டெல்லியில் இரண்டாவது முறையாக போராட 102 பேர் வந்தோம். அதில் சுமார் 70 பேர் உடல் சுகவீனம், போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காத நிலையால் அவரவர் ஊர்களுக்குத் திரும்பி விட்டனர். மீதமுள்ள 32 பேரும் ஜந்தர் மந்தரில் இரவு பகலாக போராடி வருகிறோம்" என்கிறார் அய்யாக்கண்ணு.
"என்னை பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டவர் ஹெச்.ராஜா. அதன் பிறகுதான் சமூக ஊடகங்களில் என்னை விமர்சித்து பலவித தகவல்கள் வரத் தொடங்கின" என்றார் அய்யாக்கண்ணு.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்த பிறகு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டுக் கொண்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் உணவருந்தினேன். அப்போது நான் இடது கையால் உணவு சாப்பிடுவது போல ஒரு படத்தை சித்தரித்து சில விஷமிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
எனக்கு "ஆடி" காரா?
அதுபோல நான் உயர் ரக சொகுசு "ஆடி" கார் நின்றதால் அந்த கார் எனக்குரியது என்று ஹெச்.ராஜா கூறினார். அதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்றார் அய்யாக்கண்ணு.
மேலும், நான் யாரையோ திட்டுவது போல "மிமிக்ரி" செய்து சமூக ஊடகங்களில் ஒரு ஆடியோவை பரப்புகின்றனர் என்றார் அவர்.
ஜந்தர் மந்தரில் விவசாயிகளுக்கு சிலர் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர். உள்ளூர் பாஜகவினரின் அழுத்தங்களால் அவர்கள் வெளிப்படையாக ஆதரவு வழங்க மறுக்கின்றனர் என்றும் அய்யாக்கண்ணு கூறினார்.
இந்த நிலையில் அய்யாக்கண்ணுவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி இருப்பது போல அவர் கூறுவதை ஏற்க முடியாது என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஹெச்.ராஜா மறுப்பு
யாருடைய தூண்டுதலிலோ பணத்தை வாங்கிக் கொண்டு அய்யாக்கண்ணு செயல்படுவதாகவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.
அண்மையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராகுல் என்பவரை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் அய்யாக்கண்ணு திட்டியதை சுட்டிக்காட்டிய ராஜா, அதுபோன்ற அநாகரிக செயல்களால் அய்யாக்கண்ணுவுக்கு எதிர்ப்பாளர்கள் அதிகம் இருக்கலாம் என்றார்.
"விவசாயிகளின் தலைவர்" என அடையாளப்படுத்திக் கொண்டு அரை நிர்வாணத்துடன் அய்யாக்கண்ணு நடத்தும் போராட்டங்களை விவசாயிகளே விரும்பவில்லை என்றும் ராஜா குறிப்பிட்டார்.

எலி, பாம்பை கடிப்பதாகக் கூறி மண்டை ஓடுகளுடன் முப்பது, நாற்பது விவசாயிகளை வைத்துக் கொண்டு புரளி வித்தையை அய்யாக்கண்ணு காட்டுவதாக ஹெச்.ராஜா கூறினார்.
மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாநில அரசுகள்தான் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தன என்றும் தமிழக முதல்வர் அளித்த உறுதிமொழி அடிப்படையில்தான் கடந்த முறை தனது போராட்டத்தை அய்யாக்கண்ணு கைவிட்டதாக ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அய்யாக்கண்ணு போராட்டத்தை நடத்த வேண்டிய இடம் சென்னையா அல்லது டெல்லியா என்று ராஜா கேள்வி எழுப்பினார்.
எனவே, யாரிடமோ பணம் வாங்கிக் கொண்டு, யாருடைய தூண்டலின்பேரிலோ அய்யாக்கண்ணு இதுபோல செய்து கொண்டிருக்கிறாரே ஒழிய, உண்மையாக அவர் விவசாயிகளுக்காகப் போராடவில்லை என்பதை விவசாயிகள் புரிந்து கொண்டுள்ளனர் என்றார் ஹெச். ராஜா.
திமுக எம்.பி.க்கள் ஆதரவு
இந்த நிலையில் தங்களின் 18-ஆவது நாள் போராட்டத்தையொட்டி இன்று மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில், "உங்களுக்கு ஓட்டு போட்டதால் நான் கெட்டேன்" என கோஷமிட்டவாறு ஜந்தர் மந்தர் வீதியில் விவசாயிகள் ஊர்வலமாகச் சென்றனர்.
மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருடன் ஜந்தர் மந்தருக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

உடல் நலமில்லா விவசாயிகள்
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் சிலருக்கு வயோதிகம் காரணமாக மூச்சுத்திணறல், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக அய்யாக்கண்ணு கூறுகிறார்.
"ஜந்தர் மந்தரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராம் மனோகர் லோஹியா அரசு மருத்துவமனைக்கு செல்லும் விவசாயிகளுக்கு இலவசமாக மருந்து அளிக்காமல், வெளியே உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கிக் கொள்ளும்படி மருத்துவர்கள் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராடுவதால் எங்களை பாரபட்சமாக மருத்துவமனை நிர்வாகம் நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது" என்கிறார் அய்யாக்கண்ணு.
திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த 70 வயது பெரியசாமி, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்காததால் ஜந்தர் மந்தர் பகுதிக்குத் திரும்பி வந்து சாலை ஓரத்தில் படுத்துள்ளார்.
"எனக்கு மூச்சு மட்டுமே உடலில் உள்ளது. உடலை அசைக்கக் கூட சக்தி இல்லை" என்கிறார் பெரியசாமி.

குறைந்து வரும் ஆதரவு
தங்களின் போராட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அய்யாக்கண்ணு குழுவினர், தினமும் பல வித போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், முன்பு போல தங்கள் போராட்டத்துக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து ஆதரவு தெரிவிக்கும் நிலை தற்போது இல்லை என்று ஜந்தர் மந்தரில் உள்ள விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.
இது பற்றி திருச்சியைச் சேர்ந்தவரும் அய்யாக்கண்ணு குழுவினருக்கு ஆதரவாக போராடி வருபவருமான தன்னார்வலர் பிரகாஷ் கூறுகையில், "விவசாயிகளின் போராட்டத்துக்கு தொடக்கத்தில் ஏராளமான இளைஞர்கள், கல்லாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
அவர்கள் ஜந்தர் மந்தருக்கு வந்தாலும் உள்ளூர் பாஜகவினரின் நெருக்கடிகளால் போராட்டப் பகுதியில் அதிக நேரம் நிற்காமல் சென்று விடுகின்றனர்" என்றார்.

புகாருக்கு ஆதாரமில்லை
ஆனால், இந்த குற்றச்சாட்டை டெல்லியில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான ஆசீர்வாதம் ஆச்சாரி மறுக்கிறார்.
அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஏற்கெனவே 100 நாள் போராட்டம் நடத்துவதாகக் கூறி கடந்த முறை டெல்லிக்கு வந்தவர் அய்யாக்கண்ணு. ஆனால், தமிழக முதல்வர் அவரை சந்தித்துப் பேசியதும் போராட்டத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினார்" என்றார்.
"இதையடுத்து மீண்டும் டெல்லிக்கு அய்யாக்கண்ணு வந்து போராட்டம் தொடங்கிய பிறகு மத்திய அமைச்சர்களையும், டெல்லி வந்த தமிழக முதல்வரையும் சந்தித்து ஒரே கோரிக்கையை முன்வைக்கிறார்.
இதை பார்க்கும்போது, போராட்டத்துக்கான இலக்கு மத்திய அரசா அல்லது மாநில அரசா என்பது தெரியாமலேயே அவர் போராடி வருவது தெளிவாகிறது என்றார் ஆசீர்வாதம்.
எனவே, உடனடியாக அய்யாக்கண்ணு குழுவினர் ஊருக்குத் திரும்பி தனது போராட்டத்தை தமிழகத்தில்தான் நடத்த வேண்டும். மற்றபடி, பாஜகவினருக்கு எதிராக அய்யாக்கண்ணு சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது" என்று ஆசீர்வாதம் தெரிவித்தார்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












