You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெங்களூரு: `ரிசார்ட் அரசியலின்` அடையாளமாக அறியப்படுவது ஏன் ?
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சிக்கு இழுப்பதைத் தடுப்பதற்காக, 40 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடந்த சனிக்கிழமை காலை பெங்களூரு அழைத்துவரப்பட்ட சம்பவம் கர்நாடக மக்களுக்கு எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
பெங்களூரு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் மட்டுமல்ல, நாட்டின் `ரிசார்ட் அரசியலின்` தலைநகராகவும் அறியப்படுகிறது.
ஆறு குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்ததையடுத்து, இந்த 40 எம்.எல்.ஏக்களும் அகமதாபாத் மற்றும் ராஜ்கோட்டில் இருந்து பெங்களூருவிற்கு விமானத்தில் வந்தடைந்தனர்.
சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராகவும், சோனியா காந்தி ராகுல் காந்திக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் மூன்றாம் தலைவராகவும் இருப்பவர் அகமது படேல்; இவர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் நிலையில், இவர் வெற்றிபெற போதிய எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்குமா என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் அதிர்ச்சிக்குக் காரணம்.
அகமது பட்டேல் ஐந்தாம் முறையாக மாநிலங்களைவை எம்.பி பதவிக்குப் போட்டியிடுகிறார். அவருக்கு 46 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், கட்சித் தாவலால் 58ஆக இருந்த குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பலம் தற்போது குறைந்துள்ளது.
எம்.எல்.ஏக்கள் பெங்களூரு-மைசூரு சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில், கர்நாடகா மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் தம்பியும், பெங்களூரு புறநகர் எம்.பியுமான டி.கே சுரேஷின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
``இந்த எம்.எல்.ஏக்கள் எங்களது விருந்தினர்கள். இவர்கள் ஓய்வு எடுக்க பெங்களூருவிற்கு வந்துள்ளனர். சில கோயில்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். கர்நாடகா ஒரு அமைதியான இடம் என்பதால் இவர்கள் இங்கு வந்துள்ளனர்`` என டி.கே.சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
``குஜராத்தில் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகப் போராட எங்களுக்கு சக்தி தருமாறு திருப்பதி பாலாஜியிடம் வேண்டுவதற்கு வந்துள்ளோம்.`` என எம்.எல்.ஏ பரேஷ் தானானி கூறுகிறார்.
ராஜ்கோட்டில் இருந்து பெங்களூருவிற்கு வந்த 9 எம்.எல்.ஏக்கள் கொண்ட இரண்டாம் குழுவை, தானானி உடனிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்தார்.
முதலாம் குழுவாக பெங்களூருவிற்கு வந்த 31 எம்.எல்.ஏக்களை கர்நாடக மின்சாரத் துறை அமைச்சரின் தம்பியான எம்.பி சுரேஷ், நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்று அவர்களைப் பாதுகாப்பாக ரிசார்டிற்கு பேருந்தில் அழைத்து வந்தார்.
ஆனால், இது போன்ற பேருந்துகள், பாதுகாப்புகள், பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான குற்றச்சாட்டுகள் போன்றவை கர்நாடகாவின் ரிசார்ட் அரசியலில் புதிதல்ல.
இது போன்ற சம்பவம் முதல் முறையாக ஜூலை 1984-ம் ஆண்டு நடந்தது. அப்போது ஐதராபாத்தில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் பெங்களூருவிற்கு பேருந்தில் அழைத்துவரப்பட்டனர். அப்பேருந்தின் படிக்கட்டில், தாடி வைத்திருந்த ஒரு இளம் நபர் நின்றுகொண்டிருந்தார். அந்த நபரின் பெயர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் தற்போதைய முதல்வர்.
என்.டி.ராமா ராவ் தலைமையிலான ஆந்திராவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை வீழ்த்த நாடெண்டல பாஸ்கர் ராவ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்த நிலையில், பாஸ்கர் ராவிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்களை காப்பற்ற, அவர்கள் பெங்களூரு அழைத்துவரப்பட்டனர்.
பாஸ்கர் ராவிற்கு அப்போதைய ஆந்திர ஆளுநர் ஆதரவளித்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு வெங்கையா நாயுடு போன்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இச்சம்பவம் நடந்து 11 வருடங்கள் கழித்து, 1995-ம் ஆண்டு, தனது மானானாரிடம் இருந்து முதல்வர் பதவியை கைப்பற்றத் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்களை ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்தார் சந்திரபாபு நாயுடு.
குஜராத்தின் தற்போதைய ரிசார்ட் அரசியல், முன்னதாக 1996-ம் ஆண்டும் நடந்தது. 1996-ம் ஆண்டு எதிர்வர இருந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தன் பெயரை அறிவிக்க வேண்டும் என ஷங்கர் சிங் வகேலா எதிர்பார்த்தார். அவர் பெயரை அறிவிப்பதற்கு அகமது பட்டேல் தடையாக இருப்பதாக கூறி, வகேலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகினர். இதனையடுத்து, குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
2002-ம் ஆண்டு மகாராஷ்ராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையிலான அரசினை காப்பாற்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூரு அழைத்துவரப்பட்ட போது ரிசார்ட் அரசியலில் பெங்களூரு மீண்டும் பிரபலமடைந்தது.
கர்நாடகத்தின் முதல் காங்கிரஸ்- ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை 2006-ம் ஆண்டு எச்.டி.குமாரசாமி கவிழ்த்த போது கர்நாடகத்தின் ரிசார்ட் அரசியல் புதுவிதமாக இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜனதா தளம் கட்சியின் தரம் சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட இரண்டு நாட்களில், ஜனதா தள எம்.எல்.ஏக்களை ரிசாட்டில் தங்க வைத்து பிறகு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்பு அவர்களை நிறுத்தினார் குமாரசாமி.
எப்போதேல்லாம் அரசியலில் குழப்பம் ஏற்படுகிறதோ, அப்போதேல்லாம் எம்.எல்.ஏக்களை ரிசார்டில் தங்க வைப்பதைக் குமாரசாமியும், எடியூரப்பாவும் வழக்கமான ஒன்றாக மாற்றினர்.
எடியூரப்பாவை போல ரிசார்ட் அரசியலை பயன்படுத்திய அரசியல்வாதி யாரும் இருக்க முடியாது. 2010-ம் ஆண்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, எம்.எல்.ஏக்களை ரிசார்டில் தங்க வைத்தார். சதானந்த கவுடாவை முதல்வராக்குவதற்கும், 2012-ல் கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து அகற்றவும் ரிசார்ட் அரசியலையே எடியூரப்பா பயன்படுத்தினார்.
சமீபத்தில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ. பன்னீர் செல்வம் இடையிலான அதிகார போட்டியின் போதும், சசிகலா குழுவினர் ரிசார்ட் அரசியலையே நம்பியிருந்தனர்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்