You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேரறிவாளனுக்கு பரோல் - அரசு கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்வது பற்றி பரீசீலிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி சட்டமன்றத்தில் கூறியதை அடுத்து, பேரறிவாளனின் விடுதலைக்காக குரல் கொடுப்போர் மகிழ்ச்சியையும், அதை எதிர்ப்பவர்கள் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமையன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் பரோலில் பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக முதல்வர் பேசியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்.
''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தது, எனக்கு ஒரு பேரிழப்பாக இருந்தது. அவர் இருந்தவரை, என் மகன் உறுதியாக விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பின்னர் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தின. ஆனால், தற்போதைய முதல்வரும், ஜெயலலிதாவின் முடிவை பின்பற்றி என் மகனை விடுவிப்பது தொடர்பாக பேசியது எனக்கு உறுதியைத் தருகிறது,'' என்றார் அற்புதம்மாள்.
அவர் மேலும், முதல்வர் தனது மகனை 'மதிப்பிற்குரிய பேரறிவாளன்' என்று குறிப்பிட்டுப் பேசியது, மிகுந்த நம்பிக்கையைத் தருவதாக பிபிசி தமிழிடம் பேசியபோது தெரிவித்தார்.
''விரைவில் என் மகன் வருவான் என்று எதிர்பார்க்கிறேன். முன்பு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன். தற்போது மகனின் வருகைக்காக மணிக்கணக்கில் மட்டுமே காத்திருக்கவேண்டும் என்ற எண்ணம் மகிழ்ச்சியை தருகிறது,'' என்றார் அற்புதம்மாள்.
தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.
''நீண்ட காலமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தால், அதை ஆயுட்கால தண்டனையாக மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே தீர்ப்புகளின் அடைப்படையில், பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை பரோலில் விடுவிக்க வேண்டுகோள் வைக்கலாம். சிறையில் ஒரு நபரை பல ஆண்டுகள் வைத்திருப்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது,'' என்றார்.
இதற்கிடையில், பேரறிவாளனின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் மட்டுமே இறுதி முடிவை எடுக்கமுடியும் என்று காங்கிரஸ் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
''முதல்வர் பேரறிவாளனை குறிப்பிடும்போது மதிப்பிற்குரிய என்ற வார்த்தையை பயன்படுத்தினர் என்பதை வைத்து அவரை கண்ணியமாக நடத்தியுள்ளார் என்று கூறமுடியாது. பேரறிவாளனின் விடுதலையில் மத்திய,மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவு செய்யமுடியாது என்று கருதுகிறேன்,'' என்றார்.
சட்டரீதியான பதிலாக காத்திருக்கவேண்டும் என்றும் தமிழக அரசின் முயற்சி மட்டுமே பேரறிவாளனுக்கு விடுதைலை அளிக்க முடியாது என்கிறார் இளங்கோவன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்