அ.தி.மு.கவில் உச்சத்தை நோக்கி நகரும் முட்டல் - மோதல்

    • எழுதியவர், முரளீதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, செய்தியாளர்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இரண்டு - மூன்றாக உடைந்த அ.தி.மு.கவில் தற்போது உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக, ஆளும் அ.தி.மு.க பிரிவிற்குள் மோதல்கள் வெளிப்படையாக வெடித்துள்ளன.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்றார்.

அவரே முதல்வராகவும் பதவியேற்க முடிவுசெய்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனால், அ.தி.மு.க. சசிகலா தலைமையில் ஒரு பிரிவாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவாகவும் கட்சி செயல்படத் தொடங்கியது.

ஆனால், சசிகலா தலைமையிலான பிரிவிலேயே பெரும் எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்த நிலையில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார்.

இதனால், அவரது அணியைச் சேர்ந்த அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.

எடப்பாடியின் தனிப் பாதை

ஆனால், முதல்வராகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே தன் நிலையை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் பழனிச்சாமி ஈடுபட்டார்.

சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

அந்த இடைத் தேர்தலில் தினகரன் வெல்லும் பட்சத்தில், தன்னுடைய முதல்வர் பதவிக்கு ஆபத்து நேரலாம் என்பதனாலேயே அவர் இடைத் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லையென்று கூறப்பட்டது.

இதற்குப் பிறகு, அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான விவாதங்கள் நடந்தபோது, தினகரன் கட்சி நிர்வாகத்தை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டுமென தீர்மானித்திருப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

தினகரனின் திரிசங்கு நிலை

டிடிவி தினகரனும் தான் ஒதுங்கியிருக்கப்போவதாகத் தெரிவித்தார். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்களும் அகற்றப்பட்டன.

ஆனாலும் இரு அணிகளும் இணையவில்லை.

இந்நிலையில், இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைதுசெய்யப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் தன் நிலையை முழுவதுமாக உறுதிப்படுத்திய பழனிச்சாமி, சுயேச்சையாகவே செயல்பட்டார்.

சிறையிலிருந்து தினகரன் விடுதலையாகி சென்னை வந்ததும் தான் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

அவரை 34 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இவர்கள் தரப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

கட்சிக் கட்டுப்பாட்டை தினகரனிடம் அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா, இஃப்தார் விருந்து ஆகியவற்றில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான தினகரனின் பெயர் இன்றியே அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்:

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான் முடிவு செய்வார் என தினகரன் தரப்பு கூறிவந்த நிலையில், பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த அன்று அன்று மாலையில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பில் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் பெயரோ, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பெயரோ இடம்பெறவில்லை.

ஆனால், சசிகலாவின் உத்தரவின் பேரிலேயே இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டதாக தம்பிதுரை அடுத்த நாள் கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தினகரன் தரப்பு, தாங்களும் பா.ஜ.க. வேட்பாளரையே ஆதரிக்கப்போவதாக அறிவித்தது.

கட்சியைக் கைப்பற்ற மோதல்

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த அரக்கோணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோ. அரி, சசிகலா குடும்பத்தினர் கட்சியிலிருந்து வெளியேற வேண்டுமென்றும் பழனிச்சாமியின் உத்தரவின்படியே பா.ஜ.கவுக்கு ஆதரவளிக்கப்பட்டதாகவும் கூறினர்.

இதற்கு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தற்போது ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி வசம் இருந்தாலும் கட்சியைக் கைப்பற்றுவதில் கடும் யுத்தம் நடந்தவருகிறது.

தினகரனுக்கு அழைப்பு விடுக்காமல் நடத்தப்பட்ட இஃப்தார் விருந்து விழாவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்ளவில்லை.

சட்டப்பேரவையிலும் இந்த மோதல் வெளிப்பட்டது.

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான தங்க தமிழ்ச்செல்வன், ஆளும்கட்சியாக இருந்தும் வெளிநடப்புச் செய்தார்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோரும் மாட்டு இறைச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர்.

இந்த நிலையில், பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும் ஊடகங்களின் மூலமாக வெளிப்படையாகவே மோதிவருகின்றனர்.

தனியார் பாலில் கலப்படம் இருப்பதாகக் கூறும் அமைச்சர், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், ராஜினாமா செய்ய வேண்டும் என வைகைச் செல்வன் கூறியதற்கு, அவர் 500 ரூபாய் கூலிக்குப் பேசுபவர் என்று ராஜேந்திர பாலாஜி பதிலளித்தார்.

செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்திய ராஜேந்திர பாலாஜி, வைகைச் செல்வன் ஒரு மனநோயாளி என்றும் தவறான நடத்தையால் பதவியிழந்தவர் என்றும் கூறினார்.

`அனைத்துக்கும் காரணம் பாஜகவே`

அ.தி.மு.கவில் தற்போது நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்குமே பாரதீய ஜனதாக் கட்சியே காரணம் என பிபிசியிடம் பேசிய அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரின் ஆசிரியரான மருது அழகுராஜ் குற்றம்சாட்டினார்.

தற்போது கட்சியின் தலைவர்களுக்கு மத்தியில் உள்ள மோதல் கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்கள் வரை செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அமைதியான முறையில் தலைமை மாற்றம் நடைபெற்ற நிலையில், பாரதீய ஜனதாக் கட்சி விளைவித்த குழப்பத்தால்தான் தற்போது கட்சி உடைந்திருப்பதாகவும் அ.தி.மு.கவை உடைக்கும் முயற்சியில் அந்தக் கட்சிக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும் மருது அழகுராஜ் கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலும் அதிமுக அணிகளும்

பாரதீய ஜனதாக் கட்சிதான் அ.தி.மு.கவை அழிக்க முயல்கிறது என்றால், அ.தி.மு.கவின் மூன்று பிரிவுகளும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்தது ஏன் என்ற கேள்விக்கு, தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க முடியாது என்பதால் அ.தி.மு.க. அந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக மருது அழகுராஜ் கூறுகிறார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளோ, அமைச்சர்களோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தது கிடையாது.

ஆனால், தற்போது கட்சியின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கட்சியைப் பற்றியும் ஆட்சியைப் பற்றியும் மாறுபட்ட கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்:

தமிழ்நாட்டில் விற்கப்படும் பாலில் கலப்படம் இருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் வெளிப்படையாகவே கூறிவரும் நிலையில், முதல்வர் அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பதோடு, அது குறித்து கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதேபோல, அமைச்சர்களை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள்கூட கடும் கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்துவருகின்றனர்.

கவிழுமா அதிமுக ஆட்சி ?

"அ.தி.மு.கவில் தற்போது நிலவும் குழப்பங்கள், குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு உச்சத்தைத் தொடும். முடிவில் கட்சி, உடைந்து சிதறி ஆட்சி கவிழும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி.

தற்போது அ.தி.மு.க. எந்த அரசியல் பார்வையும், திசையும் இல்லாத கட்சியாக இருக்கிறது என்று கூறும் மணி, திட்டமிட்டு மத்திய அரசு அந்தக் கட்சியை நொறுக்கும் வேலையை செய்துவருகிறது என்று கூறுகிறார்.

ஜெயலலிதா இறந்த பிறகு, தொடர்ச்சியாக அ.தி.மு.கவிற்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்தும் செயல்களும் நடவடிக்கைகளும் மத்திய அமைப்புகளால் ஏற்படுத்தப்படுகின்றன என்கிறார் மணி. தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டது, விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, இரட்டை இலை முடக்கம், தினகரன் கைது, குட்கா வியாபாரிகள் அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் ஆகியவை படிப்படியாக நடத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தன்னுடைய முதல்வர் பதவியைத் தக்கவைக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தன் செல்வாக்கை மக்களிடமும் கட்சிக்குள்ளும் அதிகரிக்க விரும்புகிறார். அவர் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்கும் புகைப்படங்கள் அரசால் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

பிரச்சனைகளைத் தவிர்க்க மாற்றங்கள் தவிர்ப்பு

ஆனால், முதலமைச்சராக பழனிச்சாமி பதவியேற்ற பிறகு அமைச்சரவை மாற்றப்படவில்லை.

கட்சிப் பொறுப்புகளிலும் புதிதாக நியமனங்களோ, மாற்றங்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அப்படிச் செய்தால், அது மேலும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும். தற்போதைய நிலையையே அடுத்த நான்காண்டுகளுக்குத் தொடர நினைக்கிறார் அவர்.

ஆனால், கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு விருப்பங்களுடனும் அபிலாஷைகளுடனும் உள்ள வேறு தலைவர்கள் அதனை அனுமதிப்பார்களா என்பதுதான் கேள்வி. குறிப்பாக டி.டி.வி. தினகரன்.

தமிழக சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளும் அ.தி.மு.கவிற்கு 135 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ளனர்.மீதமிருக்கும் உறுப்பினர்களில் 34 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்குமளவுக்கு தற்போது செல்லமாட்டார்கள் என்பதுதான் பழனிச்சாமிக்கு உள்ள ஒரே ஆறுதல்.

இதையும் படிக்கலாம்:

கடலுக்குள் களமிறங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்