You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரைப்பட விமர்சனம் : புலிமுருகன்
`புலி முருகன்`, கடந்த ஆண்டு அக்டோபரில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றதோடு, இதுவரை மலையாளத்தில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை குவித்த படமாகவும் அமைந்தது. முன்பே தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் தற்போது தமிழிலும் வெளியாகியிருக்கிறது.
புலியூரில் வசிக்கும் புலி முருகன், சிறுவயதிலேயே தாயை இழந்தன். தந்தையையும் புலிக்கு பலி கொடுத்தவன். அதனால், தந்தையைக் கொன்ற புலியை வேட்டையாடுகிறான். வளர்ந்த பிறகு ஒரு லாரியின் டிரைவராக பிழைப்பு நடத்தும் புலி முருகன், அவ்வப்போது புலி வேட்டை ஆடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறான்.
படித்துவிட்டு வீடு திரும்பும் புலிமுருகனின் தம்பி மணிக்குட்டன், தன் நண்பனின் மருந்து நிறுவனத்திற்காக காட்டிலிருந்து கஞ்சாவை ரகசியமாக அந்த நிறுவனத்திற்கு கொண்டுசேர்க்க வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் தனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்றும் கூறுகிறான்.
இதற்கிடையில், புலி முருகன் வேட்டையாடிய ஒரு புலி குறித்து விசாரிக்க புலியூருக்கு வருகிறான் ஆர்.கே. என்ற வனப் பாதுகாவலன். இதனால், கஞ்சாவை ஏற்றிச்செல்ல ஒப்புக்கொள்கிறான் புலி முருகன். இதற்குப் பிறகு மருந்துக் கம்பனியை நடத்தும் டாடி கிரிஜாவின் அறிமுகம் ஏற்பட்டு, அவனுடனேயே தங்குகிறான்.
அப்போதுதான் டாடி கிரிஜா போதை மருந்து தயாரிப்பது தெரியவருகிறது. இதற்குப் பிறகு, தம்பியை சிக்கலில் இருந்து காப்பாற்றுவதோடு, புலியூரை வேட்டையாடிவரும் புலியிடமிருந்தும் காப்பாற்றுகிறான் புலிமுருகன்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்த டேக் ஆஃப், சஹாவு, மகேஷிண்ட பிரதிகாரம், அங்காமாலி டைரீஸ், சிஐஏ உள்ளிட்ட படங்களோடு புலி முருகனை ஒப்பிட்டுப் பார்த்தால் சற்று ஏமாற்றம் ஏற்படலாம். புலி முருகன் முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் திரைப்படம்.
சிறந்த நடிகர்களைத் தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றியை உறுதிசெய்விட்டார் விசாக். மோகன்லால், கமாலினி முகர்ஜி, லால், ஜெகபதிபாபு, கிஷோர் என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மோகன்லாலின் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜியும் அவரது மாமாவாக வரும் லாலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.
கமர்ஷியல் படம் என்று முடிவுசெய்த பிறகு, லாஜிக் தேவையில்லை என்பதால் விறுவிறுப்பாக நகர்கிறது படம்.
ரொம்பவும் நல்லவராக இருக்கும் மோகன்லால் தம்பிக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு லாரி நிறைய கஞ்சாவைக் கடத்துவாரா, ஒரே ஆள் வேல்கம்பை வைத்துக்கொண்டு ஒரு புலியைக் கொல்ல முடியுமா என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் பார்த்தால் க்ளைமாக்ஸ் வரை சுவாரஸ்யமாகவே நகர்கிறது படம்.
ஆனால், படத்தின் இறுதியில் வரும் சண்டைக் காட்சி, படத்தின் மிகப் பெரிய பலவீனம்.
அதேபோல, சம்பந்தமே இல்லாமல் வரும் நமீதாவும் படத்தோடு ஒட்டவில்லை.
தவிர, படம் நெடுக பெரிதாக ஒரு தீமை நடக்கப்போவதைப்போல ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆனால், அப்படி ஒரு பிரச்சனை வரும்போது வழக்கமான ஹீரோவாக மாறி சண்டைபோட்டு மீண்டுவிடுகிறார் மோகன்லால்.
வியட்னாம் காடுகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது. அதேபோல, புலி வரும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் க்ராஃபிக்ஸும் உறுத்தாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
'முருகா... முருகா.. புலி முருகா' என்ற பின்னணி பாடல் நன்றாக இருக்கிறது என்றாலும் படத்தின் பெரும்பாலான நேரத்தில் அந்தப் பாட்டு ஒலிப்பது, காது வலியை ஏற்படுத்துகிறது.
க்ளைமாக்ஸை மன்னித்துவிட்டால், ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான படம் இது.
பிற திரைப்படங்களின் விமர்சனங்கள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்