You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடிக்கு புத்தகங்கள், கீழடியில் காட்சிக் கூடம்'
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புதிதாக புத்தகங்கள் வாங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருப்பதாக மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். பள்ளிக் கல்வித் துறையில் பல புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்போது பல புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும், மாணவியர் படிக்கும் 5639 பள்ளிக்கூடங்களில் நாப்கின் வழங்கப்படும் எந்திரங்கள், எரியூட்டிகளை அமைப்பது, 31322 பள்ளிக்கூடங்களில் சிறுவர் இதழ்கள், நாளிதழ்களை வாங்குவது, 17,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடமாக மாற்றுவது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மேலும், சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு 5 கோடி ரூபாய் செலவில் புதிய துறை சார்ந்த நூல்களை வாங்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பிறகு, இந்த நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கப்படாத நிலையில், இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இது தவிர, மதுரையில் 6 கோடி ரூபாய் செலவில் புதிய நூலகம் ஏற்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், பொருள் சார்ந்த எட்டு காட்சிக் கூடங்களையும் நூலகங்களையும் அமைக்கப்போவதாக அரசு இன்று தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில், பழம்பெரும் நாகரீகங்கள் குறித்தும் தஞ்சாவூரில் நுண்கலை, நடனம் குறித்தும் நாட்டுப்புறக் கலைகள் குறித்து மதுரையிலும் தமிழ் மருந்துகள் குறித்து திருநெல்வேலியிலும் பழங்குடியினர் பண்பாடு குறித்து நீலகிரியிலும் கணிதம், அறிவியல் சார்ந்து திருச்சியிலும் அச்சுக்கலை சார்ந்து சென்னையிலும் வானியல் குறித்து கோவையிலும் காட்சிக் கூடங்கள், நூலகங்கள் தலா எட்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளன.
மேலும் அரிய நூல்கள், ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, அனைவரும் பயன்பெறும் வகையில் ஒரு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்றும் பிற மொழியில் உள்ள சிறந்த நூல்களை தமிழில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இவை தவிர, வெளிநாடுகளிலும் மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழாசிரியர்களை அனுப்பப் போவதாகவும் சிங்கப்பூர், யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்களை அனுப்பப் போவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்