You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்ச்சைக்குரிய அதானி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு ஆஸ்திரேலியா அரசு பச்சைக்கொடி
ஆஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரியஒரு நிலக்கரி சுரங்கக் கட்டுமானத்தை மேற்கொள்ள இறுதி முதலீட்டு ஒப்புதலை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு அரசு வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், 16.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை,(12.3பில்லியன் அமெரிக்க டாலர்கள் ) கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள பெரிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஆரம்பத்தை அறிவிக்கும் விதமாக இந்த முடிவு உள்ளது என கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் முன்கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சுரங்கத் திட்டம் முதலீட்டை உருவாக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் விமர்சகர்கள் இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுகிறார்கள்.
"நீதிமன்றங்களிலும், உள்நாட்டில் வீதிகளிலும் மற்றும் வங்கிகளின் வெளிப்புறங்களிலும் , ஆர்வலர்கள் எங்களுக்கு சவால் விடுத்தனர்,'' என்று அதானி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார். ''நாங்கள் தற்போதும் ஆர்வலர்களை எதிர்கொண்டுவருகிறோம். ஆனால் நாங்கள் இந்தத் திட்டத்தில் உறுதியோடு உள்ளோம்,'' என்றார்.
பிற செய்திகள்:
பெரிய முதலீடு
குயின்ஸ்லாந்தின் கலிலி பேஸினில் உள்ள கார்மிச்செல் சுரங்கத்தில், 250 சதுர கிமீ (95 சதுர மைல்) பரப்பளவில் ஆறு திறந்த வெட்டு பள்ளங்கள் மற்றும் மூன்று நிலத்தடி சுரங்கங்களும் வெட்டத் திட்டமிடப்படுகின்றது.
இந்த அறிவிப்பு ஒரு பச்சை விளக்கு சமிக்ஞை என்று அதானி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை விவரித்தது.
கடந்த வாரம், அதானி மற்றும் குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கங்களுக்கு இடையே நடந்த சுரங்க வருமானப் பகிர்வு ஒப்பந்தத்தை அடுத்து இது வந்துள்ளது.
"மாநில முழுவதும் வேலைவாய்ப்புகள் இருக்கும், இந்தத் திட்டம் அந்த வேலைகளை வழங்கும்," என்று குயின்ஸ்லாந்து பிரதம அமைச்சர், அனாஸ்டேசியா பாலஸ்ச்குக் கூறினார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அரசாங்க ஒப்புதல்கள் காரணமாக பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்க முடிவு என்று மத்திய வளத்துறை அமைச்சர் மாட் கானவன் தெரிவித்தார்.
" ஒரு இந்திய நிறுவனத்தால் ஆஸ்திரேலியாவில் இதுவரை செய்யப்பட்டதில் மிகப்பெரிய முதலீடு இதுவாகும்," என்று அவர் கூறினார்.
சுரங்கத்திலிருந்து பெரிய அளவில் நிலக்கரி தோண்டி எடுக்கப்படுவதால், இந்த நடவடிக்கை புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் உட்பட விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இது ஏற்கனவே நலிவுற்ற நிலையில் உள்ள பெரிய பவளப்பாறைகளின் தொகுப்புகளைப் (Great Barrier Reef) பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
"இந்தச் சுரங்க திட்டம் காலநிலை, குயின்ஸ்லாந்து மற்றும் உலகெங்கும் உள்ள பெரிய பவளப்பாறைகளின் தொகுப்புகள், அதைச் சார்ந்துள்ள சமூகங்கள் ஆகியவற்றிற்க்கு ஒரு பேரழிவாக அமையும்,'' என்று க்ரீன்பீஸ்அமைப்பின் செய்தி தொடர்பாளர் நிகோலா காசூல் ஒரு செய்தியறிக்கையில் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்