You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் செளதி, எகிப்து
கத்தார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் செளதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கத்தார் விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை இன்று செவ்வாய்க்கிழமைமூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்திற்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி, கத்தாருடனான தங்கள் ராஜிய உறவுகளை பல நாடுகள் துண்டித்துவிட்டன.
பஹ்ரைன், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள கத்தார் நாட்டினர் இரண்டு வாரங்களில் அந்நாடுகளிலி்ருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுக்கிறது; "வெளிப்படைத்தன்னையுடனும் நேர்மையுடனுமான பேச்சுவார்த்தைகளுக்கு`` பிற நாடுகளை கத்தார் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியிலிருந்து, மறு அறிவிப்பு வரும்வரை, எகிப்து வான்பரப்பு கத்தார் விமான சேவைகளுக்கு மூடப்படும் என எகிப்து தெரிவித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துகளை இணைக்கும் முக்கிய தளமாக கத்தாரின் தலைநகர் டோஹா இருப்பதால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கத்தார் ஏர்வேஸ், எத்திஹாட் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் நாட்டின் மேற்கில், பெரி்ய நாடாக இருக்கும், சவுதி அரேபியாவின் வழியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கத்தார் நாட்டு விமானங்கள், கூடுதல் தூரப் பாதைகள் மூலம் பயணிக்க வேண்டும், எனவே பயண நேரமும் அதிகமாகும்.
இருப்பினும் கத்தார் விமானங்கள், சர்வதேச கடல் பகுதி என்றும் சர்வதேச வான்வெளியில் பறக்க முடியும் என்று கத்தாரின் வெளியுறவு அமைச்சர், ஷேக் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்- தனி, அல்ஜசிரா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவிற்கு உட்பட்ட வான்பரப்பை, வழக்கத்தைவிட அதிகமாக திங்கட்கிழமை 15 கத்தார் விமானங்கள் பயன்படுத்தியதாக, பெயர் வெளியிடாத சோமாலி அதிகாரி ஒருவர் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்