You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தனியார் பாலில் கலப்படம் என அமைச்சரே புகார் சொன்னதால் அச்சமும், சர்ச்சையும்
தமிழ்நாட்டில், தனியார் பால் உற்பத்தியாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தைப் பயன்படுத்துவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு நடப்பதாக இருந்தால், நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஊடகங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கி, மக்களிடையே பீதியைக் கிளப்புவதுதான் அமைச்சரின் வேலையா என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆவின் பால் நிறுவனம் சிறப்பாக செயல்படுவது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்களைப்பற்றி குறை கூறினார்.
தலைநகர் சென்னையில் மட்டும் 50 சதத்துக்கும் மேற்பட்ட பால் தேவையை, தனியார் நிறுவனங்கள் நிறைவேற்றி வரும் நிலையில், தனியார் பாலில் ரசாயனம் கலப்பதால், அவை நோயை உண்டாக்கும் வகையில் இருப்பதாகவும், குறிப்பாக புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும் இருப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பல உண்மைகள் தெரியவந்திருப்பதாகவும், தனியார் நிறுவனங்கள் தங்களைச் சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்திருந்தார்.
ஆனால், அமைச்சரின் இந்த நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புற்று நோய் ஏற்படுத்தும் பொருட்கள் பாலில் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்தர் பாலாஜியே, வழிப்போக்கன் போல போகிற போக்கில் பேசி, பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்க வேண்டாம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலில் கலப்படம் செய்யப்படுவது தொடர்பான பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காலத்திலிருந்தே, அதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாங்கள் கோரி வருவது அரசின் கவனத்துக்கு வராமல் போனது ஏன் என பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் புகாருக்கு, ஆரோக்கியா பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரமோகன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தாங்கள் எந்தவிதமான ரசாயனமும் கலப்பதில்லை என்றும், யார் வேண்டுமானாலும் எந்தக் கட்டத்திலும் சோதனை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
`அமைச்சரின் நடவடிக்கை சந்தேகத்துக்குரியது?'
அமைச்சரின் இந்த நடவடிக்கை, தார்மிக ரீதியாக சரியல்ல என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தனவேல் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு அதிகாரம் உண்டு. உரிய சோதனைகளை நடத்த முடியும். அவ்வாறு செய்து, பெரிய ஊழலை வெளிப்படுத்தி, எடுத்த நடவடிக்கை குறித்து பேட்டி கொடுத்திருந்தால்தான் சரியாக இருந்திருக்கும். மாறாக, அவர் இவ்வாறு பேசியிருப்பது சந்தேகத்துக்கு வழிவகுத்திருக்கிறது என்று பிபிசி தமிழிடம் தனவேல் தெரிவித்தார்.
முன்பெல்லாம் தேர்தலுக்கு முன்பு, பஸ் போக்குவரத்து நிறுவனங்களிடம் நிர்பந்தம் செய்தால் நிதி கொடுப்பார்கள். அதுபோன்று, தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறுவதற்காக இதுவும் ஒரு வசூல் உத்தி என்ற சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும் என தனவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆவின் பாலில் கலப்படம் செய்யப்படுவதாகவும், அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் பெரிய அளவில் புகார்கள் எழுந்தன. மக்கள் நம்பி வாங்குவதாகக் கூறப்படும் ஆவின் பால் தொடர்பான அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன, நடவடிக்கை என்ன என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என தனவேல் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் பேச்சுக் குறித்து கருத்துத் தெரிவித்த கோவை கன்ஸ்யூமர் காஸ் என்ற நுகர்வோர் அமைப்பின் செயலர் கதிர்மதியோன், இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கை என சாடியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக தனியார் பால் அனைத்தையும் நிறுத்திவிட வேண்டுமா என்ற சந்தேகமும் இதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரத்துறை மூலம் உரிய சோதனைகளை நடத்தி, எடுத்த நடவடிக்கைகளைத்தான் வெளியே சொல்லியிருக்க வேண்டுமே தவிர, இப்படிப் பேசுவது ஓர் அமைச்சரின் வேலை அல்ல என்று கதிர்மதியோன் கருத்துத் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்