You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட ராணுவ ஜவான் உமர் : கண்ணீரில் மூழ்கிய காஷ்மீர் கிராமம்
- எழுதியவர், மாஜித் ஜஹாங்கீர், ஸ்ரீநகர்
- பதவி, பிபிசி இந்தி
செவ்வாய்க்கிழமையன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம், ஹர்மீன் பகுதியில் இருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் 22 வயதான இந்திய ராணுவ வீரர் லெப்டினன்ட் உமர் ஃபயாஸ். இந்த சம்பவத்துக்கு இதுவரை பயங்கரவாத இயக்கம் எதுவும் பொறுப்பேற்கவில்லை.
குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுமுறையில் சென்றிருந்தார் உமர் ஃபயாஸ். நிராயுதபாணியாய் இருந்த ராணுவ அதிகாரியை கடத்திச்சென்று கொடூரமாய் கொலை செய்தவர்களை நீதியின் முன்பு நிறுத்த ராணுவம் உறுதிபூண்டுள்ளது.
உமர் பயாஸின் சொந்த கிராமத்திற்கு சென்றார் பிபிசி செய்தியாளர்.
காஷ்மீரின் தெற்குப் பகுதியில் குல்காம் மாவட்டத்தின் சட்சன் கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. வாசலில் பந்தல் போடப்பட்டிருக்கும் அவரது வீட்டில் இருந்து அழுகுரல்கள் ஒலிக்கிறது.
உமரின் தாய் அழுது கொண்டேயிருக்கிறார், அவரால் எதுவும் பேசமுடியவில்லை, அவரை தேற்றமுடியாமல் தோற்றுப்போகும் பிறரும் அவருடன் சேர்ந்து அழுவதையே பார்க்கமுடிகிறது.
ஜம்மு-காஷ்மீரின் அக்னூரில் பணிபுரிந்த உமர் ஃபயாஸ், மாமன் மகளின் திருமணத்தில் கலந்துக் கொள்வதற்காக ஒன்பது நாள் விடுப்பில் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போதுதான் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டார்.
விவசாயி மகனான உமர் பயாஸ், அனந்த்நாகில் ஜவஹர் நவோதயா பள்ளியில் படித்தார். உமரின் இளைய சகோதரிகள் இருவரும் பள்ளிச் சிறுமிகள்.
புத்திசாலி மாணவரான உமர், ப12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதும் தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று ராணுவ அதிகாரியானார்.
உமரின் இரண்டு மாடி வீட்டிற்கு சென்றபோது, இடப்புறம் இருந்த அறையில் சுமார் 20 பேர் அமர்ந்திருந்தனர். உமரின் தந்தை ஃபயாஸ் அஹ்மதும் அங்கிருந்தார்.
அவருடன் பேச எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை, கண்ணீர் மல்க பேச முயன்றாலும் அவரால் அதிகம் பேசமுடியவில்லை.
உமர் வீட்டில் இருந்திருந்தால் இந்த கடத்தல் சம்பவமே நடந்திருக்காது. அவர்கள் யாராக இருந்திருந்தாலும், உமரை கடத்த விட்டிருக்கமாட்டோம், எங்களது உயிரே போயிருந்தாலும் சரி. திருமண நிகழ்ச்சியின்போது, வெளியிடத்தில் இந்தக் கொடுமையை செய்துவிட்டார்கள் என்று கொந்தளிக்கிறார் உமரின் ஒன்றுவிட்ட சகோதரர் முதாசிர்.
"உமர் மிகவும் திறமையானவன், புத்திசாலி. எப்போதும் படிப்பைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பான். காஷ்மீர் முழுவதும் தேடினாலும் அவனைப் போல புத்திசாலியான ஒருவரை பார்க்கமுடியாது" என்று வருத்தப்படுகிறார் முதாசிர்.
"பள்ளியில் படிக்கும்போது, பாடத்தை குறித்துக் கொள்ளவே மாட்டான், கற்றுக்கொடுப்பதை அப்படியே மனதில் வாங்கிக்கொண்டு, நல்ல மதிப்பெண்களை வாங்குவான். மிகவும் பணிவானவன். பெரியவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துக் கொள்வான்" என்கிறார் முதாசிர்.
விடுமுறையை கழிக்க வீட்டிற்கு வந்த உமர், தனது தந்தையுடன் ஆப்பிள் தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார்.
"வேலை கிடைத்து, சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாய், திருமணம் செய்துக் கொள் என்று நான் சொன்னேன்', அதற்கு, '28 வயதில் திருமணம் செய்து கொள்வேன், அதற்கு முன் நான் எந்த நிலைக்கு உயரப்போகிறேன் என்று பாருங்கள், அதை உங்களால் கற்பனை கூட செய்துபார்க்கமுடியாது என்று சொன்னான்" எனச் சொல்லி அழுகிறார் முதாசிர்.
உமர் ஃபயாஸ் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று சொல்கிறார், உமரின் மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரர் முஸாஃபர் அஹமத். 'கிரிக்கெட்டும், வாலிபாலும் அவனுக்கு பிடித்தமான விளையாட்டுகள்' என்று சொல்கிறார் முஸாஃபர் அஹமத்.
உமரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று கூறும் அஹமத், தங்களது ஒரே மகனான உமரின் இழப்பு அவரது பெற்றோருக்கு ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியில் இருந்து எப்படி மீண்டுவரப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறி அழுகிறார் அவர்.
'உமரின் மரணச் செய்தி தெரிந்தவுடன், படுக்கையில் படுத்திருந்த நான், பைத்தியக்காரனைப் போல கத்திக் கொண்டு எழுந்து வெளியே ஓடினேன்' என்று சொல்கிறர் அஹமத்.
உமரின் நண்பர்களும் அங்கே இருந்தனர். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவரை நண்பர்களும் சந்தித்திருக்கின்றனர்.
'உமருடன் பேசினால் எதாவது ஒரு நல்ல விஷயத்தை கற்றுக் கொள்ளமுடியும். கடந்த மாதம் 21 ஆம் தேதி உமரை கடைசியாக நான் பார்த்தேன், அப்போது நாங்கள் கிரிக்கெட் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகன் உமர்' என்று அவர் நினைவுகூர்கிறார் உமரின் நண்பர் சாஹர் அஹமத்.
உமர் கொல்லப்பட்ட விதம் குறித்து சாஹர் மிகவும் வருத்தப்படுகிறார். உமரின் வாழ்க்கை இப்படி முடியும் என்று யாருமே நினைத்துக் கூட பார்த்த்தில்லை என்று சொல்லி அழுகிறார் அவர்.
உமரின் கிராமத்தை சேர்ந்த குலாம் ஹஸன் சொல்கிறார், `என்.டி.ஏ தேர்வு எழுதி ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்ட உமரை பற்றி நாங்கள் அனைவரும் பெருமையுடன் பேசிக் கொள்வோம். இங்கிருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் உமர் ஒரு ரோல் மாடல்` என்று அவர் சொல்கிறார்.
காஷ்மீரின் தெற்குப் பகுதி கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பாதுகாப்பு படைவீர்ர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்