You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக அவரது சொந்த கிராமத்தில் கருப்பு கொடி போராட்டம்
உச்சநீதிமன்றம் கொல்கத்தாஉயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு விதித்துள்ள ஆறு மாத கால சிறை தண்டனையை எதிர்த்து அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் மக்கள் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைப்பதாக கர்ணனின் சகோதரர் அறிவுடை நம்பி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, நீதிமன்ற அவமதிப்பிற்காக நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு மாத கால சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய கொல்கத்தாவைச் சேர்ந்த காவல் துறையினர் அவரை தேடிவந்தனர்.
அவர் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நீதிபதி கர்ணனின் சகோதரரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருப்பதாக அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். கர்ணன் குடியரசு தலைவரை சந்தித்து தனது நிலையை எடுத்துரைக்கவுள்ளார். சட்ட வல்லுனர்களிடம் அவர் பேசிவருகிறார்,'' என்று அறிவுடை நம்பி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''அவர் யாருக்கும் பயப்படமாட்டார். அவர் சட்டப்புத்தகங்களை படித்துக்கொண்டிருப்பார். சட்ட ஆலோசனை செய்துவருகிறார். யாருக்கும் தெரியாமல் சென்னையில் ஒரு இடத்தில் இருந்து அமைதியாக ஆலோசனை செய்து வருகிறார்,''என்றார்.
நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்வதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிக் கேட்டபோது, ''அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் புரையோடியுள்ள ஊழலை அவர் வெளிக்கொணர்வதால் அவர் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன,''என்றார்.
விருத்தாசலத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்துவரும் அறிவுடை நம்பி, நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரின் சொந்த ஊரான மங்கலம் கிராமத்தில் மக்கள் வீடுகளில் கருப்புக் கோடி ஏற்றியுள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்