You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா: தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல்
கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு திமுக ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், இந்த விழாவுக்கு அழைப்பது தொடர்பாக திமுக - பாரதீய ஜனதா கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி 1957-இல் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு நடந்த எந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடையாமல், மீண்டும் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.
கருணாநிதி சட்டமன்றத்தில் நுழைந்து அறுபதாண்டுகள் நிறைவடையும் நிலையில், அதனை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு திமுக. ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'திமுகவின் பதில் அரசியல் நாகரீகமல்ல'
இந்த விழாவுக்கு தங்களுடைய கட்சி உள்பட அனைத்துக் கட்சியினரையும் அழைக்க வேண்டுமென பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இதற்குப் பதிலளித்த திமுகவின் ஆர்.எஸ். பாரதி, மதவாதக் கட்சிகளைத் தாங்கள் வைரவிழாவுக்கு அழைக்கப்போவதில்லை என கூறினார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், கருணாநிதி முதுபெரும் தலைவர் என்பதால் அவ்வாறு கேட்டதாகவும் தங்களுக்காக கேட்காமல் அனைத்துக் கட்சியினருக்காகவும் கேட்டதாகவும் திமுகவினர் இப்படிப் பதிலளித்திருப்பது நாகரீகமல்ல என்றும் கூறினார்.
இன்று இதற்குப் பதிலளித்திருக்கும் திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "பாரதீய ஜனதா கட்சியினர் திராவிட இயக்கத்தினரை அழிக்கப் போவதாகக் கூறி வருகின்றனர். அப்பிடியிருக்கும் நிலையில், அவர்களை இந்த விழாவுக்கு அழைத்து மேடையில் அமரவைத்து தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்பதால்தான் அழைக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.
தற்போது உடல் நலமின்றி உள்ள திமுக தலைவர் கருணாநிதி, மருத்துவர்கள் அனுமதித்தால் விழாவில் பங்கேற்பார் என திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்