You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநில அரசின் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்பு வகுப்புகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தன.
இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் முதுநிலைக் கல்வி முறைப்படுத்துதல் விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி, முதுநிலை மருத்துவக் கல்வி வகுப்புகளுக்கும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கிராமப்புறத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடும் ரத்துசெய்யப்பட்டது.
2012ஆம் ஆண்டில் இந்த விதிக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், 2015ஆம் ஆண்டில் அனுமதியளித்தது. அதே நேரத்தில் தொலைதூரப் பகுதிகள், மலை கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு தகுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் அளித்து அவர்களுக்கு முதுகலை இடங்கள் கிடைக்க வகைசெய்யலாம் என்று கூறியது.
இருந்தபோதும் தமிழகத்தில் இந்த முறை பின்பற்றப்படாத நிலையில், ராஜேஷ் வில்ஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். கிராமப்புற மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களை பொதுப் பிரிவுக்குக் கொண்டுவந்து, தன்னைப் போல தொலைதூரங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் இடம் கிடைக்க வகைசெய்ய வேண்டுமென அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, "மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு செல்லாது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே தமிழக அரசு நடக்க வேண்டும். இதில் தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு பொருந்தாது'' என்று கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இதையெதிர்த்து தமிழக அரசின் சார்பிலும் மருத்துவர்கள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே. சசிதரன், எஸ்.எம். சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில், இரு நீதிபதிகளும் மாறுப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின் அடிப்படையிலேயே இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு நடைமுறை பல ஆண்டுகளாக இருப்பதாலேயே அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். நீதிபதி சசிதரன், முந்தைய தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளார்.
இதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்யநாராயணாவுக்கு அனுப்பப்பட்டது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்யநாராயணா, எஸ்.எம். சுப்பிரமணியன் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று குறிப்பிட்டார்.
இதனால், தமிழகத்தில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மலைப்பகுதி, உள்ளடங்கிய பகுதிகள், அணுகுவதற்கு கடினமாக உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் சலுகை கிடைக்கும்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு மலைப்பகுதி, உள்ளடங்கிய பகுதிகள், அணுவதற்குக் கடினமாக உள்ள பகுதிகள் என ஏற்கனவே வகைப்படுத்தியிருப்பதால், அங்கு பணியாற்றிய மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு சலுகை கிடைக்கும். அதாவது அவர்கள் "நீட்" தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைவிட, 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
"இந்தத் தீர்ப்பு எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எங்களது போராட்டம் தொடரும். மேலும் அடுத்ததாக என்ன செய்வது என்பது குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூடி முடிவுசெய்யும்" என தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அகிலன் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தனி நீதிபதியின் உத்தரவு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் மருத்துவ இயக்குனரக வளாகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், இந்தப் போராட்டம் குறித்து உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவ சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சில சங்கங்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ள முன்வந்தன.
"மாநிலச் சூழலுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டைச் செய்துகொள்வதற்கு தமிழக அரசு ஓர் அவசரச்சட்டத்தை நிறைவேற்றி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அது ஒன்றுதான் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு. உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றாலும் இந்த வழக்கில் வெல்ல முடியாது" என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.
தற்போது தமிழகத்தில் 1603 மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பிற்கான இடங்கள் இருக்கின்றன. இதில் பாதி இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. மீதி இருக்கும் இடங்களில் பாதி இடங்கள் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
காணொளி: கிராமப்புற மருத்துவர் பற்றாக்குறை: நமீபியா வழிகாட்டுகிறதா?
காணொளி: கேட்கும் திறன் குறைவு: ஆனாலும் வெற்றி பெற்றுள்ள பெண் பல் மருத்துவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்