You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூன்று கால்களுடன் வங்கதேச சிறுமி: வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை
இடுப்புடன் இணைந்த மூன்றாவது காலுடன் பிறந்த வங்தேச சிறுமி, ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்ட வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பின் வங்கதேசம் திரும்பினார்.
மூன்று வயதாகும் சோய்டி கதூன் பிறப்பிலேயே இடுப்பெலும்பில் இரட்டை பகுதிகள் கொண்டவர்.
சோய்டி கதூனின் கூடுதல் உறுப்பை அகற்றுவது மற்றும் இடுப்பு மண்டலத்தை மறுகட்டமைப்பது குறித்து ஆஸ்திரேலிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல மாதங்களாக ஆலோசனை நடத்தினார்கள்.
'சில்ட்ரன் ஃபர்ஸ்ட் ஃபவுண்டேஷன்' என்னும் அறக்கட்டளை, வங்கதேசத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த இந்தச் சிறுமியை, சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றது.
சோய்டி கதூனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மிகவும் அரிதானதாகவும், கடினமானதாகவும் இருந்ததாக, விக்டோரியா நகரில் உள்ள மோனாஷ் சிறார் மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கிரிஸ் கிம்பெர் கூறுகிறார்.
"இந்த அறுவை சிகிச்சை ஒருவரால் தீர்மானிக்கப்பட்டது, இதற்கான ஆய்வு செய்ய நிறைய நேரம் செலவிட வேண்டியிருந்ததோடு, அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகளையும் முறையாக திட்டமிட வேண்டியிருந்தது" என 'ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனுக்கு' அளித்த பேட்டியில் கிரிஸ் கிம்பெர் சொன்னார்.
சோய்டி கதூனுக்கு இதற்கு முன் சில அறுவை சிகிச்சைகளை செய்திருந்த பங்களாதேஷ் மருத்துவர்களுடன், ஆஸ்திரேலிய மருத்துவர் குழு விரிவான கலந்தாலோசனைகளை மேற்கொண்டது.
சோய்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதற்கு முன்னதாக, அவருக்கு செய்யக்கூடிய அறுவை சிகிச்சை சாத்தியமானதா, பயனுள்ளதா என மருத்துவக் குழு தீர்மானிக்க வேண்டியிருந்தது.
சோய்டியின் மூன்றாவது காலின் ஒரு பகுதியை பங்களாதேஷ் மருத்துவர்கள் அகற்றினாலும், "இரண்டு சாதாரண கால்களுக்கு இடையில் அவரது இடுப்புப்பகுதியில் ஒரு பெரிய பகுதி இருந்தது" என்று மருத்துவர் கிம்பெர் கூறினார்.
"ஏனெனில் அங்கு இரட்டைப் பகுதி உள்ளது, சோய்டிக்கு இரண்டு மலக்குடல், இரண்டு பெண் குறிகள் இருந்ததுடன், இரண்டு மலவாய்களுக்கான சாத்தியங்களும் இருந்தன. இந்த இரட்டைப் பகுதிகள், வழக்கத்திற்கு மாறான இடத்தில் வளர்ந்து கொண்டிருந்தன."
மருத்துவக் குழுவினரின், கவனமான மிக நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை நடந்தேறியது.
சிறுமியின் உடலில் இருந்த மூன்றாம் காலின் எஞ்சிய பகுதியை அகற்றிய மருத்துவக் குழுவினர், சோய்டி வீட்டிற்கு திரும்பியதும், இயல்பாக இயங்குவதை உறுதி செய்யும் வகையில் மறுகட்டமைப்பு சிகிச்சைகளையும் மேற்கொண்டார்கள்.
பகுதியளவு பார்வை குறைபாடுள்ள சோய்டி கதூனால், தற்போது நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று சொல்லும் மருத்துவர் கிம்பெர், அவரின் எடையும் கூடியிருப்பதாக தெரிவித்தார்.
பதின்ம வயதில் கதூனுக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கலாம் என்று கூறும் அவர், ஆனால், தற்போது எந்தவித மருந்துதோ, மருத்துவ உபகரணங்களோ இல்லாமல் தனது தாயுடன் தாயகத்திற்கு அவர் திரும்ப முடிந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.
தாய் நாட்டிற்கு திரும்பி, குடும்பத்தினருடன் மகள் விளையாடுவதை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக சோய்டி கதூனின் தாய் ஷிமா கதூன், வியாழக்கிழமையன்று ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"இப்போது எல்லாம் நன்றாகவே இருக்கிறது. அவள் பிற குழந்தைகளைப் போலவே விளையாடலாம் ... எனது மகள் பிற குழந்தைகளைப் போலவே சாதாரணமாக இருக்கிறாள்" என்று ஷிமா கதூன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்