மதுவருந்தும் கணவனை தடுக்க மணப்பெண்களுக்கு 'வினோத' பரிசளித்த அமைச்சர்

மத்திய இந்திய மாநிலமான மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர், புதிதாக திருமணமான பெண்களுக்கு மரத்திலான பேட்களை பரிசளித்து அவற்றை மதுவருந்தி விட்டு தவறாகவும், மூர்க்கத்தனமாகவும் நடந்து கொள்ளும் அவர்கள் கணவர்கள் மீது பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

பொதுவாக உள்ளூர் சலவை நிலையங்களில் துணிகளில் உள்ள அழுக்கினை அடித்து நீக்குவதற்கு பயன்படும் கட்டைகளைப் போன்ற பேட்களை மாநில அரசின் ஏற்பாட்டில் நடந்த திரளான திருமண விழாவில் சுமார் 700 மணப்பெண்களுக்கு அமைச்சர் கோபால் பார்கவா வழங்கினார்.

ஓவ்வொன்றும் ஒரு அடி நீளமுள்ள இந்த கனத்த தண்டங்களில் ''குடிகாரர்களை அடித்து நொறுக்க' என்றும், ''போலீசார் இதில் தலையிட மாட்டார்கள்'' என்றும் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

கிராமப்புற பெண்கள் தங்கள் வீட்டில் சந்திக்கும் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களின் நிலையை சமூகத்தின் கவனத்துக்கு கொண்டுவர தான் விரும்பியதாக அமைச்சர் கோபால் பார்கவா தெரிவித்தார்.

இந்த பேட்களை பயன்படுத்துவதற்கு முன்னர், தங்களின் கணவரிடம் அந்தக் கட்டைகளை எதற்காகப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை விளக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுரை சொன்னார்.

ஆனால், மனைவியின் பேச்சை கணவன் கேட்கத் தவறினால், பின்னர் 'மோக்ரி என்றழைக்கப்படும் பேட் தான் பேச வேண்டும்' என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பேட்களுடன் காட்சியளிக்கும் மணப்பெண்களின் புகைப்படத்தை பார்கவா வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு இந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள சூழலில், பெண்களின் ஆதரவை பெற எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இது இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்