You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது
தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
கடந்த நான்கு நாட்களாக விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீசார், சுமார் 35 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தி, அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணியினருமே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரின.
கடந்த 12-ஆம் தேதி நடைபெற இருந்த இடைத் தேர்தல், பெருமளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், கடந்த வாரம் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ஒருவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தினகரனிடம் பல கோடி ரூபாய் அவர் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. அவரிடமிருந்து ரூ.1.3 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்தனர். அதன்பேரில், தினகரன் டெல்லி வந்து விசாரணையை சந்தித்து வந்தார்.
சுகேஷ் சந்திரா, அவரது உதவியாளர் ஜனார்த்தனா, நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தினகரன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தினகரனின் வழக்கறிஞர் வஜ்ரவேலு கூறும்போது, நேற்றுத்தான் சுகாஷ் சந்திரா, தனக்கும் தினகரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிய நிலையில் தினகரன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றும், இந்த வழக்கை தினகரன் சட்டப்படி சந்திப்பார் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து, டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை இணை ஆணையர் பிரவிர் ரஞ்சன் கூறும்போது, கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனும், மல்லிகார்ஜுனாவும் புதன்கிழமை பிற்பகல் தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
தினகரன் கைது குறித்து கருத்துத் தெரிவித்த தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், அதிமுகவின் இரு அணிகளுமே இணையவதற்கான காலம் கணிந்து கொண்டிருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியபோதே இது நடக்கும் என்பதை நாங்கள் கணித்துவிட்டோம் என்று தெரிவித்தார். இப்போது நடைபெறுவது கலாசார யுத்தம் என்றும், பாரதீய ஜனதா கட்சியின் இந்த முயற்சி வெற்றி பெறாது என்றும், தினகரன் இந்த அடக்குமுறையைத் தாண்டி வருவார் என்றும் தெரிவித்தார்.
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், இந்தக் கைதின் பின்னணியில் அவர்கள் செய்த ஊழல்தான் இருக்கிறதே தவிர, பாரதீய ஜனதா இல்லை என்று குறிப்பிட்டார்.
தினகரனின் கைது விவகாரத்தில் பாரதீய ஜனதா மீது சந்தேகம் எழுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் பாரதீய ஜனதா காலூன்ற முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்