பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை வழங்க விரைவில் சட்டம்: ம.பி. முதல்வர் தகவல்

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு சாலையோர ரோமியோக்களை கட்டுப்படுத்தும் விதமாக "ரோமியோ எதிர்ப்புப் படை" அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையை பாராட்டிய மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான், பெண்கள் மீது துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பாலியல் வன்முறைக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்க வகை செய்யும் ஒரு சட்டவரைவை கொண்டு வர உத்தேசித்திருப்பதாக செளஹான் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று, போபாலில் நடைபெற்ற மத்தியப் பிரதேச போலீஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய செளஹான், "சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு சிறைதண்டனை வழங்குவதற்கு பதில் மரண தண்டனை வழங்கும் மசோதா, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்" என்று கூறினார்.

நாடும், மாநிலங்களும் வளர்ச்சி பெற வேண்டுமானால், முதலில் கடுமையான, பொருத்தமான சட்டங்களை அமலாக்கவேண்டும். இதில் காவல்துறையினருக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. சாலையோர ரோமியோக்கள், அதாவது பெண்களை சீண்டுபவர்களுக்கு எதிரான பிரசாரத்தை நாம் முன்னெடுப்போம்" என்று மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று செளஹான் கூறுகிறார்.

தற்போதைய இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, பாலியல் வல்லுறவு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை வழங்கமுடியும்.

பாலியல் வல்லுறவுகுற்றங்களில் மத்தியப்பிரதேசத்திற்கு முதலிடம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பாலியல் வல்லுறவு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என்று மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் பேசியிருந்தார்.

நாட்டில் நடைபெறும் பாலியல் வல்லுறவு குற்றங்களில் அதிக அளவு மத்தியப்பிரதேச மாநிலத்தில்தான் நடைபெறுவதாக தேசிய குற்றப் பதிவுகள் கழகம் கூறுகிறது. அதன் தகவல்களின்படி, 2014 ஆம் ஆண்டில் 5,076 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டில் 4391 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலமும் இருக்கின்றன.

பாலியல் வல்லுறவு குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று செளஹான் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இதுவரை ஷிவ்ராஜ் சிங் செளஹன் தலைமையிலான அரசு பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பெரிய அளவிலான எந்த சாதனையும் செய்யவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்