You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`பயிரும் கருகுது, மனசும் உருகுது, எங்கள் மீது இரக்கம் காட்டலையே'
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் போராட்டம் நாடெங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தாங்கள் விவசாயம் செய்ய பணம் திரட்ட, அடகு வைத்த நகைகளை வறட்சியில் இழக்கும் நிலையில் உள்ளதாக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுடன் வந்துள்ள பெண் விவசாயிகள் பலர் பிபிசி தமிழிடம் விளக்கினர்.
திருச்சி மாவட்டத்தில் சடவேடம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாச்சம்மை (61), புதுடெல்லியில் கடந்த 18 நாட்களாக மத்திய அரசின் வறட்சி நிதி கோரி போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளில் ஒருவர்.
மழை பொய்த்து போனதும், சரியான தருணத்தில் காவிரி நீர் கிடைக்காத காரணத்தால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழு ஏக்கர் விவசாய நிலம் தரிசாக கிடக்கின்றது என்கிறார் நாச்சம்மை.
சிறிது காலத்திற்கு முன்புவரை அவரது நிலத்தில் சுமார் 20 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து வந்ததாகவும் தற்போது அரசிடம் கடனை தள்ளுபடி செய்யக்கோரி வீதிக்கு வரவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இதுதான் நாச்சம்மை பங்கேற்கும் முதல் போராட்டம்.
''ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக என் தாலிக்கொடி உட்படஎல்லா நகைகளையும் வங்கியில் செலுத்திஏழு லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். கடனை திருப்பி அளிக்க முடியவில்லை. வட்டி செலுத்த முடியாததால் என் நகை ஏலம் விடப்படும் என வங்கி அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள், '' என்கிறார் நாச்சம்மை.
தனது இரண்டு மகன்களும் விவசாய கூலிகளாக உள்ளனர் என்று கூறும் வேளையில் நாச்சம்மை அழத்தொடங்கிவிட்டார்.
முதுமையை விட வங்கிக் கடன் தான் பெரிய சுமையாக அவருக்கு இருப்பதாக கூறுகிறார். ''உடம்பில் தெம்பு இருக்கும் வரை நான் உழைக்க தயார். எங்க நிலத்தில் நெல், மிளகாய்,சோளம், கம்பு என பல்வேறு பயிர்களை விளைவித்தோம். ஆனா இப்போ எங்க வயல், சுடுகாடு போல மாறிடுச்சு,'பயிரும் கருகுது, மனசு உருகுது. எங்கள் மீது இரக்கம் காட்டலையே' என்று வேதனையால் துடிக்கிறார் நாச்சம்மை.
தனது விவசாய வருமானத்தில் சேர்த்த ஏழு சவரன் தங்கத்தையும் அடுத்த விளைச்சலில் எடுத்துவிடமுடியும் என்ற நம்பிக்கையில்தான் ராசம்மா(60) இருந்தார்.
''விளைச்சல் இல்லை, வருமானம் எதுவும் இல்லாமல் அவதிப்படுகிறோம். பெரிய முதலாளிகளின் பல கோடி ரூபாய்களை அரசாங்கம் தள்ளுபடி செய்கிறது. வெளிநாட்டு கம்பெனிகளுக்கு மானிய விலையில் மின்சாரம், தண்ணீர் கொடுக்குதுனு கேள்விப்பட்டோம். ஆனா கடனை திருப்பி செலுத்த முடியலனு சொன்னா, அரசு வங்கி அதிகாரிகள் கூட விவசாயிகளை மோசமா நடத்துறாங்க,'' என்கிறார் ராசம்மாள்.
தற்கொலை செய்து கொண்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளை பிரதமர் மோதியிடம் கொடுக்க காத்திருப்பதாக கூறுகிறார் விவசாயி ராசம்மா. தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துவிட்டதாகவும், இதுவரை எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விவசாயிகளின் கடன் பிரச்சனையை தீர்த்துவைப்பதாக வாக்களித்ததாகவும், தற்போதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
தனது வாழ்க்கையில் விவசாய நிலத்தை விட்டு வேறு எந்த விதமான விவகாரங்களை பற்றியும் தெரியாத முசிறி பகுதியை சேர்ந்த செல்லம்மாள் (60) தனது 70 வயது கணவர் பெருமாளுடன் டெல்லியில் போராட்ட களத்தில் அமர்ந்துள்ளார்.
''இத்தனை வருசமா நிலக்கடலை, கரும்பு, நெல் என பல பயிர் சாகுபடி செய்திருக்கேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் வண்டி வாங்க நகைகளை வைத்து நாலு லட்சம் கடன் பெற்றேன். இன்று வரை திருப்பி செலுத்த முடியவில்லை. வட்டி எத்தனை, அசல் எத்தனைனு கணக்கு தெரியல,'' என்கிறார் செல்லம்மாள்.
கணவருக்கு கண் பார்வை கோளாறு, 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தனது மகனை ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் பணிக்கு அனுப்பிவிட்டு போராட்டத்திற்கு வந்துள்ளார் செல்லம்மாள். ''ரேசன் கடை அரிசியை நம்பித்தான் இப்போ எங்க வாழ்க்கை. பிரதமர் மோதியை பார்த்து பேசினா எங்க கடனை தள்ளுபடி பண்ணிடுவாங்களா?,'' என்ற கேள்வியுடன் போராட்ட பதாகைகளை உயர்த்தி கோரிக்கை முழக்கதைத் தொடர ஆரம்பித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்