You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்
இலங்கையின் வவுனியாவில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் விழாவிற்காக யாழ்ப்பாணம் செல்லவிருந்த ரஜினிகாந்த், அதற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார்.
வவுனியாவில் வீடுகளை இழந்த மக்களுக்கு லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் சார்பில் 150 வீடுகளை இலவசமாக வழங்கும் விழா யாழ்ப்பாணத்தில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடப்பதாக இருந்தது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, அந்த வீடுகளின் சாவியை பயனாளிகளுக்கு வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வதாக இருந்தது. ஏப்ரல் பத்தாம் தேதியன்று வவுனியா செல்லும் ரஜினிகாந்த், பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்து கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள மக்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விழாவில் கலந்துகொள்வதை ரத்துசெய்வதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், இரண்டு காரணங்களுக்காக இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்ததாகக் கூறியுள்ளார். தங்களுடைய சுய நிர்ணய உரிமைக்காக போராடி தமிழர்கள் மடிந்த அந்த மண்ணைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விழாவில் கூடவிருக்கும் பல லட்சக்கணக்கான மக்களைக் காண வேண்டும் என்பதற்காகவே இதில் கலந்துகொள்ள சம்மதித்ததாக ரஜினி கூறியிருக்கிறார்.
அதேபோல, இந்தப் பயணத்தின்போது இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனவைச் சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும் அப்படி நேரம் கிடைத்தால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்து பேச நினைத்திருந்ததாகவும் ரஜினி தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
ஆனால், தற்போது எதிர்ப்பு எழுந்திருப்பதால், இந்தத் தலைவர்கள் கூறும் காரணங்களை ஏற்க முடியாவிட்டாலும் அவர்களது வேண்டுகோளை ஏற்பதாக ரஜினி கூறியிருக்கிறார்.
மேலும் எதிர்காலத்தில் இலங்கை சென்று தமிழ் மக்களைச் சந்தித்து, போர் நடந்த புனித பூமியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால், அதை அரசியலாக்கி போக விடாமல் செய்துவிட வேண்டாம் என ரஜினி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கும் 2.0 படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்துவருகிறார். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தத் திரைப்படம், 300 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்