You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வவுனியா விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு
வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை கையளிக்கும் விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்லக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் 150 வீடுகள் கட்டப்பட்டு, அவை தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் விழா யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடப்பதாகவும் அந்த நிகழ்விற்கு நடிகர் ரஜினிகாந்த் செல்வதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் நேற்று வெளியாயின.
இந்த நிலையில் ரஜினிகாந்த் அந்த விழாவுக்குச் செல்லக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
"தமிழ் மக்களை வஞ்சிக்கும் இலங்கையின் கொடும்போக்கை கண்டித்து எல்லோரும் பேச வேண்டிய நேரத்தில் அதைத் திசை திருப்பும் உத்தியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது," என அவர் கூறியுள்ளார்.
"ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து விழாவை நடத்தி அந்த ஒளிவெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவதாகவும் புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்திற்குக் காட்டவும் இந்த நிகழ்ச்சி பயன்படும்," என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.
"லைகா நிறுவனம் மிகப் பெரிய செலவில் தயாரிக்கும் 2.0 படத்திற்கு உலக அளவிலான விளம்பரமாக இந்த நிகழ்ச்சி பயன்படுத்திக்கொள்ளப்படக்கூடும். இதில் கலந்துகொண்டு ரஜினி உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக வேணடாம்," என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக லைகா நிறுவனமோ, ரஜினியோ இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்