You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை : ஆளுநர் அலுவலகம் தகவல்
அ.தி.மு.க சட்டமன்ற குழுத்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை ஆளுநரை சந்திக்க அவர் செல்கிறார்.
ஆனால் , தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், தற்போதைய அஇஅதிமுக பொதுச்செயலருமான, சசிகலா நடராஜன் உட்பட மூவர் குற்றவாளிகள் என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்திருந்தது.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில், விசாரணை நீதிமன்றமான பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.
இந்நிலையில், அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழு தலைவராக நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போது, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க கூவத்தூரிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி சென்று கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க அனுமதி கேட்டார் என்றும், அவர் உட்பட 12 பேர் ஆளுநரை சந்திக்க அனுமதி தரப்பட்டுள்ளது என்றும், அவர்கள் ஆட்சி அமைப்பதற்காக அழைக்கப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்